Virat kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் 3 பார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தனக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும், தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நீக்கப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்கிற தகவல் வெளியாகின. மேலும், அவரது மகளின் பிறந்தநாளை காரணம் காட்டி இந்த தொடரில் இருந்து விலக உள்ளார் என்றும் கூறப்பபட்டது.
அதே வேளையில் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியில் விராட் கோலியும் விளையாட விரும்பவில்லை என்றும், இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், அவர்களுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பபட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோலி, தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இதுகுறித்து இரண்டரை ஆண்டுகளாக விளக்கமளித்து தான் ஓய்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்து முன்னரே தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி பேசியது பின்வருமாறு:-
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கும் முன் எனது கருத்தை பிசிசிஐயிடம் கூறினேன். அவர்களும் சரியாக உள்வாங்கிக்கொண்டார்கள். இதில் எந்த தவறும் நடக்கவில்லை. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வேன் என்று அவர்களிடம் விருப்பம் தெரிவித்தேன்.
அதிகாரிகளோ அல்லது தேர்வர்களோ நான் இந்த இரண்டு பொறுப்பையும் கையாள விரும்பவில்லை என்றால், நான் அதற்கும் தயராக இருக்கிறேன் என்றும் அந்த நேரத்தில் நான் அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன்.
டி20 கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுவதாக அறிவித்ததிலிருந்து (டிசம்பர் 8 ஆம் தேதி வரை), பிசிசிஐ உடனான எனது தொடர்பு சரியாக நடக்கவில்லை. அவர்களிடம் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை. டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போது ஐந்து தேர்வாளர்கள் நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள்.
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து என்னக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
கடந்த காலங்களில் நான் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறேன் என்று சில விஷயங்கள் வெளிவந்தன, ஆனால் அப்படி எதுவும் இல்லை, அவை நம்பத்தகுந்தவை அல்ல.
ஒருநாள் போட்டிகளுக்கான செலக்சன்களுக்கு நான் எல்லா நேரத்திலும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஓய்வு வேண்டும் எனக்கேட்டு பிசிசிஐயிடம் இதுவரை நான் தொடர்பு கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன். எப்போதும் தயாராக இருப்பேன்.
எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக இரண்டரை ஆண்டுகளாக விளக்கமளித்து ஓய்ந்து விட்டேன். ரோகித் சர்மா மிகவும் திறமையான கேப்டன். அவர் தந்திரோபாய ரீதியாக மிகவும் திறமையானவர். ராகுல் பாய் (ராகுல் டிராவிட்) ஒரு சிறந்த மேனேஜர்.
இவ்வாறு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.