இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக டெஸ்ட் வெற்றிகள் வெற்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம், முந்தைய கேப்டன்களான முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனியின் சாதனைகளை கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், கோலி தலைமையிலான இந்திய அணி 28 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம், அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலி - 48 போட்டிகள் ; 28 வெற்றிகள்
மகேந்திர சிங் தோனி - 60 போட்டிகள் ; 27 வெற்றிகள்
சவுரவ் கங்குலி - 49 போட்டிகள் ; 21 வெற்றிகள்
முகமது அசாருதீன் - 47 போட்டிகள் ; 14 வெற்றிகள்
2011ம் ஆண்டில் ஜமைக்கா மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தான் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியிருந்தார். அதே மைதானத்தில், அதே அணியை வீழ்த்தி, அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி, இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடர்களையும் வென்றுள்ளது. இதேபோல், 2017ம் ஆண்டில் இலங்கை சுற்றுப்பயணத்தின்போதும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.