ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) இன்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நாடடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். இவர்களில் கவாஜா நிதானமான ஆட்டத்திய வெளிப்படுத்திய வேளையில் மறுமுனையில் அறிமுக வீரரான கான்ஸ்டாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் 10-வது ஓவரின் இடையே விராட் கோலி - சாம் கான்ஸ்டாஸ் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 10-வது ஓவர் முடிவடைந்த நிலையில் கோலி மைதானத்தில் செல்லும்போது சாம் கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கவாஜா மற்றும் கள நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
முதலில் சாம் கான்ஸ்டாஸ் வேண்டும் என்று இடித்து இருக்கலாம் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தொடரை ஒளிபரப்பி வரும் ஆஸ்திரேலியாவின் சேனல் 7 ரீப்ளேவில் உண்மையில் நடந்து என்ன? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த வீடியோவில் கோலிதான் வேண்டும் என்று தான் நடந்து சென்ற பாதையை மாற்றி சாம் கான்ஸ்டாஸை இடித்து இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சிட்னியில் நடக்கவிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதில் இருந்து கோலிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்களின் மோதல் குறித்து ஐ.சி.சி விதி
விராட் கோலி-சாம் கான்ஸ்டாஸ் சம்பவம் விதி 2.12 இன் கீழ் வருகிறது. சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) பொருத்தமற்ற வகையில் உடல் தொடர்பை ஏற்படுத்துவதை பற்றி கூறுகிறது.
போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இது லெவல் 2 குற்றமாக கருதினால், விராட் கோலிக்கு 3-4 டீமெரிட் புள்ளிகள் வழங்கப்படலாம். அதனால், சிட்னி டெஸ்டில் கோலி கலந்து கொள்ள முடியாமல், சஸ்பெண்ட் செய்யப்படலாம்.
2008 ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனின் தோள்பட்டையில் வேண்டும் என்றே மோதியதற்காக தற்போதைய இந்திய தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் 1 டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐதராபாத் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பிற்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா தோள்பட்டை மூலம் மோதிய சம்பவத்திற்கு பும்ராவுக்கு 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 2018 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக தோள்பட்டை மோதலுக்காக 1 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.