துபாயில் நடக்க இருக்கும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 முடிந்த பிறகு, இந்தியாவின் டி 20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.
32 வயதான விராட் கோலி ஒரு அறிக்கையில், தனக்கு நெருக்கமானவர்கள், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் சக வீரர் ரோஹித் சர்மா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், "பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம் மற்றும் கடந்த 8-9 ஆண்டுகளில் எனது மகத்தான பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறேன், மேலும், கடந்த ஐந்து முதல் ஆறு வருடங்களாக தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறேன். எனவே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாக தயாராக இருக்க எனக்கு நானே இடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ”என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"நான் டி 20 கேப்டனாக இருந்த காலத்தில் எனது பங்களிப்பு அனைத்தையும் அணிக்கு கொடுத்துள்ளேன், டி 20 கேப்டனுக்கு தேவையான உதவிகளை நான் தொடர்ந்து செய்வேன், மேலும் டி 20 அணிக்காக பேட்ஸ்மேனாக தொடர்ந்து பங்கேற்பேன்." என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
மேலும், “நான் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் அனைத்து தேர்வாளர்களிடமும் இது பற்றி பேசினேன். என்னால் முடிந்தவரை இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய அணிக்கு தொடர்ந்து சேவை செய்வேன்,” என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்த நிலையில், டி 20 உலகக் கோப்பை அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில நாட்களாக விராட் கோலி டி 20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது விராட் கோலி இந்த முடிவை அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil