தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மதியை உணவை முடித்துவிட்டு, ஜம்முவில் இருந்து காஷ்மீரை நோக்கி புறப்பட்ட ராணுவ கான்வாயில் 54 பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் பேருந்து மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உட்பட 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பல வீரர்களின் உடல்கள் கூட முழுவதும் கிடைக்கவில்லை. சிதைந்து போன உடல் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தது. தேசத்திற்காக ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ததை நினைத்து நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க - 44 வீரர்களை கொன்ற அதில் அகமது தார்.... தாக்குதலின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அறிவித்துள்ளன. பலரும் சமூக தளங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "கோழைத்தனமான, மோசமான, அர்த்தமற்ற தாக்குதல் இது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை நினைத்தே என் இதயம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், நாம் மிகவும் நேசிக்கும் நமது ராணுவ வீரர்கள் விரைவில் நலம் அடைய நான் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான விருது குறித்த பதிவையும், வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் வாக்களிக்கக் கோரி இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், கோடிக்கணக்கான இளைஞர்களின் ஹீரோவாக திகழும் நீங்கள் இப்படியொரு பதிவை போடலாமா? என்ற ரீதியில் விராட் கோலியை விமர்சித்தனர்.
இதனையடுத்து, அந்த ட்வீட்டை உடனடியாக நீக்கிய விராட் கோலி, வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்துக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு என்னுடைய அனுதாபங்களையும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் " என பதிவிட்டுள்ளார்.