இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் 11, 2017-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பினியான அனுஷ்கா சர்மா உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு கணவர் விராட் கோலி உதவி செய்யும் புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அதனால், விரைவில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த சூழலில்தான் இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டி, டி20 தொடர் முடிந்த பிறகு, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிரசவ தேதி நெருங்கி வந்ததால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு இன்று (ஜனவரி 11) முற்பகல் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தந்தையாகியுள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.
அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை விராட் கோலி தனது பக்கத்தில் தெரிவிக்கையில், “இன்று முற்பகல் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை ஆசிரிவதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உங்களுடைய அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். அனுஷ்காவும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் எங்களுடைய அந்தரங்கத்தை மதிப்பீர்கள் என்று நம்புகிறோம். அன்புடன் விராட்.” என்று தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை விராட் கோலியின் ட்வீட்டைப் பார்த்து தெரிந்துகொண்ட ரசிகர்கள் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"