இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக வலம் வந்தவர் வீரேந்திர சேவாக். இந்திய அணிக்காக கடந்த 1999 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்களும், 251 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8273 ரன்களையும், 19 சர்வதேச டி20 போட்டிகளில் 394 ரன்களையும் எடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக 104 போட்டிகளில் விளையாடி 2728 ரன்களை குவித்து, தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் கடந்த 20 அக்டோபர் 2015 அன்று ஓய்வு பெற்றார்.
சேவாக் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இந்த தம்பதியினர், இன்ஸ்டாகிராமில் தாங்கள் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். மேலும் சமீபத்தில் சென்ற இடங்களுக்கெல்லாம் தனியாகவே சென்றுள்ளார். இது விவாகரத்து வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதேபோல், கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சேவாக் தனது இரண்டு மகன்களான ஆர்யவீர் மற்றும் வேதாந்த் ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படங்களையே சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஆர்த்தி இடம்பெறவில்லை. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாயகக்ஷி கோவிலுக்கு சேவாக் சென்றிருந்த போதும், ஆர்த்தி குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தொடர்ச்சியான இந்த நிகழ்வுகள் பிரிவினை குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. சேவாக் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விவகாரத்தை கூர்ந்து நோக்கும் ரசிகர்கள் இதை உறுதிபட தெரிவிக்கின்றனர்.