ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “இந்தத் துயரம் நம்மை நீண்ட காலமாக ஆட்டிப் படைக்கும். இந்த துயரமான நேரத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடியும்.
சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் அத்தகைய குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் ஜூன் 2ஆம் தேதி மாலை மோதின.
முதலில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. தொடர்ந்து, பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்துக்கு மோசமான சிக்னல் கோளாறு காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த விபத்தில் 275க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“