ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் இரு தமிழக வீரர்கள் பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர்.
இருவரின் உடலும், இன்று அவர்கள் சொந்த ஊர்களில், 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, 'சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், "இவர்களுக்காக என்ன செய்தாலும் அது ஈடாகாது. ஆனால், குறைந்தபட்சம் என்னால், உயிரிழந்த நமது வீரமிக்க வீரர்களின் பிள்ளைகளின் முழு படிப்பையும் என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் முழுமையாக வழங்கிட முடியும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
சேவாக்கின் இந்த பதிவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்தும் பாராட்டியும் வருகின்றனர்.
மேலும் படிக்க - 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்!