இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ஜாம்பவான் வீரராக வலம் வரும் இவர், சர்வதேச செஸ் அரங்கில் ஏராளமான சாதனைகளை படைத்து இந்தியாவின் கொடியை வானுயர பறக்க செய்தவர். செஸ் உலகமே இன்று இந்தியாவை திரும்பி பார்க்க அடித்தளமிட்டவர் இவர். அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி தற்போதைய இளம் தலைமுறை வீரர்கள் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விஸ்வநாதன் ஆனந்த், தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய ஆல்ரவுண்டர் வீரரான அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், கேரளாவுக்கு ரயிலில் சென்றபோது நடந்த அந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். இது தொடர்பான வீடியோவை தற்போது எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் பதிவிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விஸ்வநாதன் ஆனந்த் அஸ்வினிடம், "நான் ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவுக்கு ரயிலில் சென்றேன். அப்போது, எனக்கு அருகில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த உரையாடலின் போது அந்த மனிதர் என்னிடம், 'நீ என்ன பண்ணற? (என்ன வேலை செய்கிறார்?)' என்று கேட்டார். அதற்கு அவரிடம், 'நான் செஸ் ஆடுறேன்' என்றேன்.
'ஆனா என்ன பண்ணுற?' என்று கேட்டார். 'இல்ல நான் செஸ் ஆடுறேன்' என்றேன். 'படிக்கிறாயா?' என்று கேட்டார். 'ஆமா, படித்துக் கொண்டு தான் இருக்கிறேன், ஆனா செஸ் ஆடுறேன்' என்று அவரிடம் சொன்னேன். 'அப்பாவுக்கு கம்பெனி இருக்கா?' என்று கேட்டார். 'இல்லை, இல்லை' என்று சொன்னேன். அப்போது அவர் என்னிடம், 'தம்பி தப்பா எடுத்துக் கொள்ளாதே, இந்தியாவில் ஸ்போர்ஸ் கொஞ்சம் கணிக்கும் அளவுக்கு இல்ல. நீ விஸ்வநாதன் ஆனந்த்-தாக இருந்தால் செஸ் ஆடலாம். ஆனா... இவ்வளவு ரிஸ்க் எடுக்காதே' என்றார்.
அவர் உண்மையில் விளையாட்டுக்கு எதிராக பேசவில்லை. ஆனால், எதிர்காலம் ஆபத்தில் முடியலாம் என்பது போன்ற கவலை தெரிவித்தார். அவர் அப்படி கூறியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நான் அவரிடம் நான் தான் விஸ்வநாதன் ஆனந்த் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் எனக்கு மனசு வரவில்லை." என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
Interesting narration of his experience in Kerala by Viswanathan Anand😁😍 pic.twitter.com/8sKmj80EFr
— Anil Padmanabhan🇮🇳🕉️🚩 (@anilp68) September 24, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.