worldcup 2023 | australia-vs-pakistan | Waqar Younis: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2ல் வெற்றி, 2ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தன்னை பாகிஸ்தானியர் என அழைக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்களான ஷேன் வாட்சன், ஆரோன் பின்ச் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் ஆகியோர் வர்ணனை செய்தனர். அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற உற்சாகத்தில் பேசிக்கொண்டிருந்த பின்ச் மற்றும் வாட்சன் இருவரும் பாகிஸ்தான் குறித்து பேசினார்.
அப்போது பேசிய வக்கார் யூனிஸ், “என்னை பாகிஸ்தானியர் என்று அழைக்காதீர்கள். நான் பாதி ஆஸ்திரேலியன். எனவே என்னை பாகிஸ்தானியர் என்று மட்டும் முத்திரை குத்தாதீர்கள்" என்று கூறி திகைப்பூட்டினார். இதனால், வர்ணனையில் சில நிமிடங்கள் சிரிப்பலை எழுந்தது. வாட்சனும், பின்ச்சும் வக்கார் யூனிஸ் பேச்சைக் கேட்டு சிரித்தனர்.
இந்த நிலையில், வக்கார் யூனிஸ் தெரிவித்த கருத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியைப் பெறுவதால் தான் அப்படி கூறுகிறார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக பார்க்கப்படும் அவர் இந்த மாதிரியான கருத்தை தெரிவித்திருக்க கூடாது என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர் இப்படி சொன்னதுக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. வக்கார் யூனிஸ் பிறப்பால் பாகிஸ்தானி என்றாலும், தற்போது அவர் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் வசித்துவருகிறார். அவரது மனைவி ஃபார்யல் பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். ஃபார்யல் அங்கு மருத்துவராக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் தன்னை பாதி ஆஸ்திரேலியர் என்று வக்கார் யூனிஸ் கூறியிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.