இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்து வருகின்றது. இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய, இந்திய அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அதோடு மிடில் - ஆடரில் இருந்த பேட்ஸ்மேன்களும் ஏமாற்றத்தையே தந்தனர். ரிஷப் பந்த் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய தாகூரும், சைனியின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். வாஷிங்டன் சுந்தர் இந்த டெஸ்ட் போட்டியில் தான் அறிமுக வீரராக களமிறங்கினார். இறங்கிய முதல் போட்டியிலே அரை சதத்தை கடந்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். அவரது விளையாடும் பாணி டி 20 போட்டி விளையாடுவது போலவே இருந்தது. அதோடு அவரது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் சோர்வு நிலைக்கே சென்று விட்டனர்.
வாஷிங்டன் சுந்தரின் 10 வயது முதல், அப்பா எம். சுந்தர் நடத்தி வந்த கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் சென்று விடுவாராம். பள்ளி செல்லும் முன் 3 மணி நேரம் அங்கு தான் பயிற்சி மேற்கொள்வாராம். இப்படி சிறுவதிலே கடினமாக உழைத்ததின் பயனே U -14 தமிழ்நாடு அணியின் சார்பாக ரஞ்சி டிராபி விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ளார். அதோடு அவரது அக்கா ஷைலஜாவிற்கும் கிரிக்கெட் கற்றுக் கொடுத்துள்ளார், தற்போது அவரது அக்கா இந்திய அணியில் விளையாடி வருகின்றார். வாஷிங்டன் சுந்தரிடம் இயற்கையாகவே கிரிக்கெட் விளையாட பேரார்வம் இருந்தாக அவரது அக்கா ஷைலஜா குறிப்பிடுகின்றார். அதோடு அவருக்கு 10 வயது இருந்த போது U-14 தமிழக அணியில் விளையாடி உள்ளார். மற்றும் 16 வயது இருந்த போது U-19 அணியில் இடம் பெற்று விளையாடி உள்ளார்.
"இது அவரது டெஸ்ட் அறிமுக போட்டி போலவே தெரியவில்லை. அவர் மிகவும் அமைதியாகவே காணப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரின் பந்துகளையும் சாதுரியமாக சந்தித்தார். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் " என்று அவரது பயிற்சியாளர் செந்தில்நாதன் கூறுகின்றார்.
வாஷிங்டன் சுந்தர் பற்றி அவரது தந்தை குறிப்பிடும்போது, "U -14 விளையாட செல்ல 9 நாட்கள் இருந்த போது, பயற்சி ஆட்டத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் தலையில் 5 தையல்கள் போடப்பட்டன. அந்த காயத்துடன் போட்டியில் விளையாடி 39 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற பல சவால்களை திறம்பட எதிர்கொள்வார் என்று அன்றே கணித்தேன்.
ஐ பி எல் போட்டிகளில் அவர் சுழற் பந்து வீசி வருவதால், அனைவரும் அவரை ஒரு பந்து வீச்சாளராக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாட கூடிய ஒரு வீரர். சிறந்த பேட்ஸ்மேன்களுக்குகான 70 % தகுதி அவரிடம் உள்ளது. 2வது ஆட்ட நாள் முடிந்த பிறகு வீடியோ கால் மூலம் அவரிடம் பேசினேன். அப்போது அவரிடம் இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிதானது. எனவே இதை விட்டு விடாதே. அதோடு உனக்கான பேட்டிங் இன்னும் முடியவில்லை, இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என ஊக்கமளித்தேன்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது நேதன் லியோன் பந்தில் அவர் அடித்த சிக்ஸர் பெரிதும் பேசப்பட்டது. அந்த சிக்ஸர் அன்றைய ஆட்டத்தில் அடிக்கப்பட்ட சிறந்த ஷாட் எனக் கூறும் அளவுக்கு இருந்தது. பொதுவாக பேட்ஸ்மேன்கள் பந்து சுழன்று வரும் பக்கத்தை நோக்கியவாரே தங்களது கவனத்தை செலுத்தி ஆடுவர். ஆனால் இந்த ஷாட்யை பொறுத்தவரை, பந்து பேட்டில் சரியாகப் பட்டது என்று நன்றாகவே தெரிந்தது. இதுவே அவருக்கு நம்பிக்கையையும் தந்தது" என்று வாஷிங்டன் சுந்தரின் தந்தை கூறுகின்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.