washington-sundar | sports | cricket: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியானான இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது.
இலங்கை பறந்த வாஷிங்டன் சுந்தர்
முன்னதாக, நேற்று கொழும்பில் நடந்த கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் வீரரான அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயத்தின் தன்மை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை. எனினும், அவருக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
அக்சார் பட்டேலுக்கு தொடைப்பகுதியில் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பி.சி.சி.ஐ கவலை அடைந்துள்ளதாகவும் தெரிகிறது. ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும்.
இந்நிலையில், அக்சர் படேல் இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆஃப் ஸ்பின் பவுலிங் வீசும் வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இணைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“