Wasim Akram Tamil News: ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. இதில், கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) மாலை 7:30 மணிக்கு நடக்கிறது. இந்த இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் மோதின. அந்த ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் அரசியல் பதட்டங்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய (ஐசிசி) மற்றும் கான்டினென்டல் (ஆசியா கோப்பை) போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இருப்பினும், இந்த இரு அணிகளும் மிகச் சிறப்பான கிரிக்கெட் வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் அணிகளாகவும் உள்ளன. மேலும், கடந்த காலங்களில் பல மறக்கமுடியாத ஆட்டத்தை அரங்கேற்றியும் இருக்கின்றன.
அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒரு மறக்க முடியா ஆட்டம் குறித்து பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறும் ஆட்டம் 1986 ஆம் ஆண்டில் நடந்த ஆஸ்ட்ரல் -ஆசியா கோப்பையின் இறுதிப் போட்டியாகும். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஒரு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஜாவேத் மியான்டட், இந்திய வீரர் சேத்தன் சர்மா வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆனாலும், இந்த ஆட்டம் முடியும் வரை பாகிஸ்தான் டக்-அவுட்டில் இருந்த வீரர்கள் மத்தியில் பதற்றம் நிலவியதாகவும், அணியில் இருந்த இளம் கிரிக்கெட் வீரர்களான ஜாகிர் கான் மற்றும் மொஹ்சின் கமால் அழ ஆரம்பித்தார்கள் என்றும் அப்போதைய இந்திய கேப்டன் கபில்தேவ் உடனான உரையாடலில் கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஃப்ரீனெமீஸ் நிகழ்ச்சியில் பேசிய வாசிம் அக்ரம், "நான் ரன் அவுட் ஆனதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். தௌசீப் அஹ்மத் விரைவாக ஒரு சிங்கிள் எடுத்தார். பிறகு மியான்டட் சிக்ஸர் அடித்தார். அப்போது நான் ஒரு இளைஞனாக இருந்தேன். என்னுடன் ஜாகிர் கான் மற்றும் மொஹ்சின் கமால் ஆகிய இரு இளம் வீரர்களும் இருந்தனர். அவர்கள் அந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் 'ஏன் அழுகிறாய்?' என்று கேட்டேன்.
அவர்கள், 'நாம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்' என்று பதிலளித்தனர். அப்போது நான், அழுதால் நமது அணியை வெற்றி பெறச் செய்ய முடியுமானால், நானும் உங்கள் அனைவரோடும் சேர்ந்து அழுதிருப்பேன்! என்றேன். இதை ஜாவேத் பாயும் நினைவுகூர்வார் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த உரையாடலில், கபில் தேவ், தோல்வி இந்தியாவின் நம்பிக்கையில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், ஆட்டத்தில் தோல்வியை நினைவுபடுத்தும் போதெல்லாம் தன்னால் இன்னும் தூங்க முடியாது என்றும் கூறினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.