இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 7 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய முதல் போட்டியில் தனது வழக்கமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட இவருக்கு தடைவிதிக்கப்பட்டது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் அளவிலான சையத் முஷ்டாக் டி20 தொடரில் கேரளா அணிக்காக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பாண்டிச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்தின் பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரிக்கெட் வாழ்கையில் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்ற ஸ்ரீசாந்துக்கு 7 பந்துகள் தேவைப்பட்டது. ஸ்ரீசாந்த் வீசிய அவுட் ஸ்விங்கரில் புதுச்சேரி அணி வீரர் ஃபேபிட் அகமது வெளியேறினார்.
ஸ்ரீசாந்த் இந்த ஆட்டத்தில் 4 ஓவரில் 29 ரன் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், தனது ஓவர் முடிந்ததும் ஆடுகளத்தில் இருந்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த் கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தார். இவர் 27 டெஸ்ட் போட்டிகளிலும், 53 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.