அதே துள்ளல்; அதே ஆக்ஷன்: பவுலிங் வீடியோ வெளியிட்ட பும்ரா; ரசிகர்கள் உற்சாகம்
பும்ரா தனது காயத்தில் இருந்து குணமாகி அவர் மீண்டு வரும் நிலையில், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்பட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பும்ரா தனது காயத்தில் இருந்து குணமாகி அவர் மீண்டு வரும் நிலையில், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்பட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அணியில் இருந்து வெளியேறினார். இதனால், 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். மேலும் சொந்த மண்ணில் நடந்த வங்கதேசம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் அவர் இந்தியாவுக்காக விளையாடவில்லை.
Advertisment
மேலும், பும்ரா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரிலும், அதன்பிறகு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் இயற்கையில் மிகவும் மோசமானதாகவும், குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில மாதங்களாக பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வு எடுத்து வந்தார்.
தற்போது பும்ரா தனது காயத்தில் இருந்து குணமாகி அவர் மீண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்பட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் 'கம்மிங் ஹோம்' என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை இணைத்துள்ளார். அதில் பும்ரா வழக்கம் போல் அதே துள்ளல் மற்றும் அதே ஆக்ஷனில் பந்துவீசி மிரட்டுகிறார்.
பும்ரா அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பும்ரா வெளியிட்டுள்ளார்.
வரும் அக்டோபரில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். அதற்கு முன்னதாக நடக்கும் ஆசிய கோப்பை அவர் களமாடினால் அது இந்தியாவுக்கு போனஸாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil