India vs England | Jasprit Bumrah: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வத இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்து மிரட்டிய தொடக்க வீரரும் இளம் வீரருமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார்.
பும்ராவின் மிரட்டல் யார்க்கர்
தற்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து வீரருக்கு வீசிய மிரட்டலான யார்க்கர் அவரை கதி கலங்க செய்தது. இதுதொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டுக்குப் பிறகு அதிரடி வீரரான ஒல்லி போப் களமிறங்கினர். இந்த ஒல்லி போப் தான் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் முக்கிய காரணமாக இருந்தார். 2வது இன்னிங்சில் 196 ரன்கள் வரை எடுத்ததோடு இந்திய பந்துவீச்சுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருந்தார். அவர் களமிறங்கியதால் மீண்டும் தலைவலி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே 55 பந்துகளை சந்தித்திருந்த அவர் 2 பவுண்டரிகளை விரட்டி 23 ரன்களை எடுத்து இருந்தார். 27 வது ஓவரை இந்தியாவின் பும்ரா வீசுகையில் அவரது பந்துகளை திணறியே எதிர்கொண்டார் ஒல்லி போப். இப்படியாக செல்ல, பும்ரா வீசிய 5வது பந்து கண் இமைக்கும் நேரத்தில் மரண யார்க்கராக மாறி ஒல்லி போப் பின்புறம் இருந்த மிடில் மற்றும் லெக் ஸ்டெம்புகளை அடியோடு சாய்த்து தூக்கி எறிந்தது.
அங்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாமல் கால் நடுங்கி நின்றார் ஒல்லி போப். பும்ரா வீசிய யார்க்கர் பந்தை மறைத்து ஆட முடியாமல் கோட்டை விட்ட ஒல்லி போப் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். முதல் டெஸ்ட் போட்டியில் 196 ரன்கள் எடுத்த அவரது விக்கெட்டை பும்ரா தான் கைப்பற்றி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“