ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரைப் போலவே உலகம் முழுதும் டி20 லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதேபோல், உள்நாட்டிலும் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டெல்லியை மையமாகக் கொண்டு டெல்லி பிரீமியர் லீக் 2024 போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடருக்கான புராணி டெல்லி 6 ஸ்குவாட் அணியை இந்திய முன்னணி விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆயுஷ் படோனியின் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி - ரிஷப் பண்ட்டின் புராணி டெல்லி 6 ஸ்குவாட் அணியுடன் மோதியது.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த புராணி டெல்லி 6 ஸ்குவாட் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்பித் ராணா 41 பந்துகளில் 59 ரன்களும், வான்ஷ் பேடி 19 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து பேட்டிங் ஆடிய சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 29 பந்துகளில் 57 ரன்களும், பிரயன்ஷ் ஆர்யா 30 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
பவுலிங் போட்ட பண்ட்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் புராணி டெல்லி 6 ஸ்குவாட் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே தேவை என இருந்த சூழலில் பண்ட் பவுலிங் போட வந்தார். அவரது பந்தை எதிர்கொண்ட ஆயுஷ் படோனி வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். அவர் தனது பவுலிங்கில் கவனம் செலுத்த விரும்பி கடைசி ஓவரை வீசினார். இதன் மூலம், தன்னால் பவுலிங் கூட போட முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் பண்ட். தற்போதைய இந்திய அணி வீரர்களை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பவுலிங் போட சொல்லி வரும் நிலையில், அவருக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் ரிஷப் பண்ட் பந்துவீசி இருக்கிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொண்ட பண்ட், துலீப் டிராபி 'டி' அணியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“