Rohit Sharma | India vs England 2nd Test: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்து மிரட்டிய தொடக்க வீரரும் இளம் வீரருமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனைத் துரத்திய இங்கிலாந்து 292 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/5827c196-b87.jpg)
ரோகித் சூப்பர் கேட்ச்
முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலும் அதன் பேஸ்பால் என்கிற அதிரடியாக ரன்களை குவிக்கும் பேட்டிங்கை தொடர்ந்தது. அதனால் 399 ரன்கள் வெற்றி இலக்கை மீதமுள்ள 2 நாள் ஆட்டத்தில் அந்த அணி எட்டிவிடும் என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இந்திய அணி பவுலர்கள் 2வது இன்னிங்சின் ஆரம்பம் முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து விடக்கூடாது என்பதில் திடமாக இருந்தனர்.
அதன்படி, தொடக்க வீரர்களாக வந்த சாக் கிராலி - பென் டக்கெட் ஜோடியை 50 ரன்னில் அஸ்வின் உடைத்தார். அடுத்த களத்தில் இருந்த சாக் கிராலி -ரெஹான் அகமது ஜோடியை 45 ரன்னில் அக்சர் படேல் உடைத்தார். இதன்பிறகு வந்த ஒல்லி போப் சாக் கிராலி உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ஒல்லி போப் விக்கெட்டை சீக்கிரமே இந்தியா கைப்பற்ற வேண்டும் ரசிகர்கள் பிராத்தனை செய்தார்கள். ஏனென்றால், ஒல்லி போப் தான் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் வெற்றி பெற முக்கிய பங்காற்றி இருந்தார். அவர் 2வது இன்னிங்சில் 196 ரன்கள் வரை குவித்து மிரட்டி இருந்தார்.
அதனால் அவரது விக்கெட் வீழ்த்தப்பட்ட வேண்டும் என பலரும் நினைத்தார்கள். அவரோ 21 பந்துகளை 5 பவுண்டரிகளை விரட்டி 23 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி வந்தார். அப்போது அஸ்வின் தனது சுழல் வித்தையை காட்ட பந்துடன் வந்தார். அவர் வீசிய 28.2வது பந்தை ஒல்லி போப் ஆப்-சைடில் அடித்து விரட்ட முயலுகையில், கேப்டன் ரோகித் அந்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
அவரது இந்த அபாரமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பந்து வருவதை பார்த்து சட்டென சுதாரித்து கொண்ட கேப்டன் ரோகித், அபாரமாக பாய்ந்து அந்த கேட்சை பிடித்தார். அவர் இந்த கேட்சை பிடிக்க 0.45 நொடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். இந்த கேட்ச் அணியின் வீரர்கள் கொண்டாட பந்துவீசிய அஸ்வின் கொண்டாடி தீர்த்தார். வீரர்கள் கேப்டனுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
இதன்பிறகு வந்த இங்கிலாந்து வீரர்களும் சற்று அச்சத்தை ஏற்படுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களது விக்கெட்டையும் இந்திய பவுலர்கள் அசத்தலாக வீழ்த்தினர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டையும், முகேஷ் குமார், குலதீப், அக்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அபார வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“