Sanju Samson's incredible act to let Yashasvi Jaiswal score a century in KKR vs RR IPL 2023 match Tamil News
RR Skipper Sanju Samson's selfless act for Yashasvi Jaiswal's century Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து, 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisment
ஜெய்ஸ்வால் ரன்மழை
இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் பட்லர் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆகி வெளியேறினார். எனினும், அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் சிறப்பான ஜோடியை அமைந்தார். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
Advertisment
Advertisements
மறுமுனையில் இருந்த கேப்டன் சஞ்சு அவருக்கு இணையாக பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டார். முடிவில், 47 பந்துகளை எதிர்கொண்ட 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 98 ரன்கள் எடுத்தார். இதேபோல், 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் சஞ்சு 48 ரன்கள் எடுத்தார்.
ஓய்டு பாலையும் விரட்டிய சஞ்சு
இந்நிலையில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற 43 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் சஞ்சு 48 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 94 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஸ்ட்ரைக்கில் இருந்த சஞ்சு சுயாஷ் சர்மாவின் 13வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார். அப்போது சுயாஷ் சஞ்சு-வுக்கு லெக் சைடில் வீச, பந்து ஓய்டாக சென்றது.
பந்து ஓய்டு சென்றால் ராஜஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்படும். அதனால் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசும் வாய்ப்பு தவறிப்போய் விடும் என்பதை உணர்ந்த சஞ்சு, லெக் சைடில் இறங்கி சென்று ஓய்டு பந்தை மறித்து விரட்டினார். எனினும், 14வது ஓவரில் முதல் பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், அதை சிக்சருக்கு பறக்க விடாமல், பவுண்டரி விரட்டினார். அதனால், அவர் தனது சதம் விளாசும் வாய்ப்பை தவற விட்டார்.
ஜெய்ஸ்வால் சதம் விளாச தேவையான பந்துகள் இருந்த நிலையில், அவர் தனது அணி சிறந்த நெட் ரன்ரேட்டை பெற ஆட்டத்தை விரைவில் முடிக்க சஞ்சு-வுடன் இணைந்து செயல்பட்டதாக கூறியிருந்தார். அவரது இந்த நற்பண்பையும், கேப்டன் சாஞ்சுவின் தன்னலமற்ற செயலையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், ஓய்டு பாலையும் விரட்டிய சஞ்சுவின் வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil