Shakib Al Hasan: வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனான ஷகிப் அல் ஹசன், தற்போது அரசியலில் குதித்துள்ளார். அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் 'அவாமி லீக்' கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், மகுரா வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் 1,85,388 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச்-3 தொகுதியில் அபார வெற்றி பெற்று, 8வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது தலைமையிலான அவாமி லீக் கட்சி 223 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக ஷகிப் அல் ஹசனிடம் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் 12வது தேர்தலில் "சிக்சர் அடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
“நீங்கள் பேச்சு கொடுக்க வேண்டியதில்லை. சிக்ஸர் அடிக்கலாம், பந்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தலாம். தேர்தலில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடிக்கவும்,” என்றும் கூறி அவரை ரத்தினக் கல் என்று அழைத்துள்ளார். இந்நிலையில், ஷகிப் அல் ஹசன் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
ரசிகர் கன்னத்தில் அறை
இந்த நிலையில், வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஷகிப் அல் ஹசனை சுற்றிவளைத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வந்தனர். அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அதிகமானது. அந்த நேரத்தில் ஷகிப் அல் ஹசனிடம் ரசிகர்கள் எல்லை மீற, திடீரென ஒருவருக்கு கன்னத்தில் பளாரென அறை கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ஷகிப் அல் ஹசனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுக்காதபோது அம்பயரை தரக்குறைவாக விமர்சித்ததோடு, ஸ்டம்புகளையும் கால்களால் உதைத்து தள்ளினார். தொடர்ந்து இதேபோல் மற்றொரு முறை நடக்க ஸ்டம்புகளை தூக்கி எறிந்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பின் ரசிகர் ஒருவரை பேட்டை வைத்து மிரட்டியது என்று அவரின் கோபம் எல்லை மீறி கொண்டே இருந்தது. தற்போது எம்.பி.-யாக வெற்றிபெற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரசிகரை அடித்துள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக வங்கதேச அணியை வழிநடத்தினார். 9 லீக் போட்டிகளில் விளையாடி அந்த அணி 2ல் வெற்றி, 5ல் தோல்வி என 8வது இடத்தைப் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“