News about Rishabh Pant, Virat Kohli - IND VS BAN 1st Test Tamil News: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை 2 ஆம் நாள் ஆட்ட நேரத்தில் ஆல்-அவுட் ஆன இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடி இந்திய அணி 61.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் சதம் விளாசிய தொடக்க வீரர் சுப்மான் கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல், தனது நீண்ட நாள் சத தாகத்தை தீர்த்துக்கொண்ட புஜாரா 102 ரன்கள் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி அதன் 2வது இன்னிங்சில், 512 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய நிலையில், அந்த அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 25 ரன்களுடனும், ஜாகிர் ஹசன் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடக்க ஜோடியை உடைத்த உமேஷ்… தட்டித் தட்டி கேட்ச்பிடித்த பண்ட் - கோலி
இந்நிலையில், சனிக்கிழமை ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ஜாகிர் ஹசன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தனர். மேலும் நிலைத்து நின்று விளையாடி இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் விளாசினார். இந்த ஜோடியை உடைக்க இந்திய வீரர்கள் போராடி வந்தனர்.
இந்த தருணத்தில் தான் பொறுப்பு கேப்டன் கே.எல் ராகுல் உமேஷ் யாதவை பந்துவீச அழைத்தார். வழக்கம் போல் அவரும் தனது வேகப்பந்தை வீசினார். அவர் வீசிய 46.1 பந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது ஆப்-சைடில் விரட்ட முயன்று பந்தை அவுட்-சைடு எட்ச் விட்டார். அப்போது கீப்பருக்கு அருகில் ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த கோலி பந்தை லாவகமாக பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கையில் குத்தி பறந்தது.
ஆன்-ஏரில் இருந்த பந்தை அங்கு கீப்பராக நின்ற பண்ட் தனது இடது கையால் லாவகமாக மடக்கிப்பிடித்தார். பின்னர் வலது கைக்கு மாற்றி தூக்கி எறிந்தார். இதனால் ஆட்டமிழந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 67 ரன்களுடன் நடையைக் கட்டினார். உமேஷ் யாதவின் அந்த சிறப்பான பந்துவீச்சு, கோலியின் நல்ல முயற்சி, பண்ட்டின் அற்புதமான கேட்ச் என அவ்வளவு நேரம் போராடிய உடைக்க முயன்ற தொடக்க ஜோடியில் ஒரு விக்கெட்டை கழற்றினர் இந்திய அணியினர்.
A solid relay catch to break the solid partnership 🤯#TeamIndia gets the much-needed breakthrough courtesy of brilliant reflexes from @RishabhPant17 🙌#SonySportsNetwork #BANvIND@imVkohli pic.twitter.com/nbSfoMvhzd
— Sony Sports Network (@SonySportsNetwk) December 17, 2022
இதன்பிறகும் இந்திய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. தொடர்ந்து வந்த வீரர்களில் யாசிர் அலி 5 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய சதமடித்த தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல், முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களும் , நுருல் ஹசன் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.ஷாகிப் 40 ரன்னுடனும், மெஹிதி ஹசன் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 513 ரன்கள் என்ற இலக்குடன் இன்று களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.