இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.
தொடர்ந்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் - ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இந்த முறை ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இருவரும், அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
மேலும், சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர் . இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்திருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கே.எல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் . இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் சீண்டினார். ஸ்டார்க் பந்துவீசிய பிறகு அவரை பார்த்து 'உங்களது பந்து மிக மெதுவாகவருகிறது' என ஜெய்ஸ்வால் நக்கலாக தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஸ்டார்க் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹர்சித் ராணா பந்துவீசினார். அப்போது, ஹர்சித் ராணாவிடம், 'நான் உன்னை விட வேகமாக பந்துவீசுவேன்' என ஸ்டார்க் தெரிவித்து இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கை தற்போது சீண்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“