பெற்ற தாயின் இறப்புக்குக் கூட செல்லாமல் பயிற்சிப் போட்டியில் விளையாடிய 16 வயது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா, வியாழக்கிழமை துவங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.
நசீம் ஷாவின் புயல் வேகப்பந்துவீச்சு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. முதலாவது டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா வருகை பாகிஸ்தான் அணிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் உயர்நிலைப் பள்ளித் தேர்வை முடித்துள்ள நசீம் ஷா முதல் தரப்போட்டிகளில் 6 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். பந்துவீச்சில் நசீம் ஷாவின் துல்லியம், 145 கி.மீ. மேல் இருக்கும் வேகம், ஸ்விங் செய்யும் திறன் ஆகியவை அனைவரையும் பிரமிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலிய ஏ அணியுடனான பயிற்சிப் போட்டியில் நசீம் பங்கேற்றார். இந்த பயிற்சி போட்டியில் நசீம் ஷா பங்கேற்ற நிலையில் அவரின் தாய் திடீரென உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். நசீம் ஷாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு செல்லாமல் பயிற்சிப் போட்டியிலேயே தொடர்ந்து பங்கேற்றார். தனது அதிகவேமான பந்துவீச்சு, பவுன்ஸர்கள், ஸ்விங் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறவிட்ட நசீம் ஷா, ஹாரிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
சச்சினுடன் இணைவாரா ? : வியாழக்கிழமை துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறங்கினால், 16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கருடன் இணைவார்.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ் பா உல் ஹக் கூறுகையில், " நசீம் ஷாவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. பந்துவீச்சில் இருக்கும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பந்தைக் கட்டுப்படுத்தி வீசுவது, ஸ்விங் செய்வது, வேகம் என அனைத்திலும் தேர்ந்த பந்துவீச்சாளர் போல் இருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் 6 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தான் அணிக்கு மாற்றுப் பந்துவீச்சாளர் மட்டுமல்ல, வரும் டெஸ்ட் போட்டியில் எங்களின் துருப்புச் சீட்டாகவும் இருப்பார்" எனத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறங்குவது ஆஸ்திரேலிய அணியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.