கோவை வடவள்ளி பகுதியில் தி "ஸ்டிராங் மேன் சாம்பியன்ஸ் 2024" எனும் தலைப்பில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. சாய் டேக்வாண்டோ கிளப் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில் பென்ச் பிரஸ்,டெட் லிஃப்ட், புஷ் அப் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் வீரர் வீராங்கனைகள் எடைகளை தூக்கி அசத்திய நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிக எடையை தூக்கி பிரம்மிப்பூட்டினர். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற 64 வயது முதியவர் இளைஞர் போன்று தண்டால் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வந்த வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் ஃபிராங்க்ளின், போட்டி நடைபெற்று கொண்டிருந்த போதே தானும் பளு தூக்கி அசத்தினார். அப்போது 100 கிலோ எடையை தூக்கிய அவர் இன்னும் போடு இன்னும் போடு என எடையை கூட்ட சொல்லி சுமார் 170 கிலோ எடையை சாதாரணமாக தூக்கி அங்கிருந்த வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற நபருக்கு இரு சக்கர வாகனம், முதல் பரிசு பெரும் 13 பேருக்கு சைக்கிள், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், மூன்றாம் பரிசாக ஏர் பட்ஸ் மற்றும் கோப்பைகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“