இலங்கை - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இலங்கையின் கல்லியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணரத்னே அடித்த பந்து தாக்கியதில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் களத்தில் இருந்த பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இலங்கை - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இலங்கையின் காலேவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிஷாங்கா - திமுத் கருணரத்னே களம் இறங்கினர். முதல் இன்னிங்ஸின் 24வது ஓவரை மே.இ தீவுகள் அணியின் ராஸ்டன் சேஷ் வீசினார். அவருடைய பந்தை எதிர்கொண்ட திமுத் கருணரத்னே ஓங்கி ஒரு பவர் ஷாட் அடிக்க, அந்த பந்து ஷாட் லெக்கில் ஹெல்மெட் பாதுகாப்புடன் நின்றிருந்த மே.இ. தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஜெர்மி சோலான்சோ தலையில் தாக்கியதால் சுருண்டு மயங்கி விழுந்தார். இதனால், களத்தில் இருந்த வீரர்களும் பார்வையாளர்களும் அதிர்சி அடைந்தனர். உடனடியாக, மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மே.இ தீவுகள் கிரிக்கெட் அணியின் 26 வயதான வீரர் ஜெர்மி சோலான்சோ இலங்கைக்கு எதிராக காலேவில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியில்தான் அறிமுகமானார். துரதிருஷ்டவசமாக அவருடைய முதல் போட்டியிலேயே பயங்கர காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திமுத் கருணரத்னே அடித்த பவர் ஷாட் ஹேல்மெட்டைத் தாண்டியும் பலமாக தாக்கியதால் ஜெர்மி சோலான்சோ சுருண்டு மயங்கி விழுந்ததால் அவருக்கு என்ன ஆனதோ என்று ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில், ஜெர்மி சோலான்சோ மருத்துவமனையில் நல்ல நிலையில் சுய நினைவுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தலையில் பந்து தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருடைய ஸ்கேன் செய்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அவருடைய உடல்நிலை உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்களான நிஷாங்கா, கருணரத்னே ஜோடி பொறுப்புடன் விளையாடி வருகிறார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்களை சேர்த்த நிலையில், நிஷாங்கா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.