வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஒரு டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் வியாழக்கிழமை (27ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், ரோவ்மன் பவல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஷிம்ரன் ஹெட்மையர் அணிக்கு திரும்பி உள்ளார்.
ஹெட்மியர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடவில்லை. மேலும் அவர் இரண்டு வருடங்களாக தனது அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. ஜூலை 2021ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தான் அவர் கடைசியாக விளையாடியது. ஆனால், இந்தாண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினர். இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 299 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஹெட்மயருடன் இடது கை பேட்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஓஷேன் தாமஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் லெக் ஸ்பின்னர் யானிக் கரியா ஆகியோர் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு அணியில் இடம் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி காயத்திலிருந்து மீண்ட பின்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஹெட்மயர் மற்றும் தாமஸ் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் தலைமை தேர்வாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனுமான டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் உறுதி கூறினார்.
"ஓஷானே மற்றும் ஷிம்ரோனை மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். இருவரும் இதற்கு முன்பு சர்வதேச அளவில் விளையாடி ஓரளவு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் ஒருநாள் செட்டப்பிற்கு நன்றாகப் பொருந்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஓஷானே வேகத்தைக் கொண்டு வந்து புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவராக இருக்கிறார். ஷிம்ரோனின் பேட்டிங் ஸ்டைல், குறிப்பாக இன்னிங்ஸின் மிடிலில் நிறைய வாய்ப்பளிக்கும்.
நிக்கோலஸ் பூரன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இந்தத் தொடருக்குக்கான அணியில் இடம் பெறவில்லை. அதேநேரத்தில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அல்ஜாரி ஜோசப், அலிக் அதானாஸ், கெவின் சின்க்ளேர் ஆகியோர் இந்த அணியில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. ஜிம்பாப்வேயில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் அந்த அணி வரலாற்றிலே முதல்முறையாக வெளியேறியது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), அலிக் அத்தானஸ், யானிக் கேரிஷ், கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோதி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஒஷேன் தாமஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.