இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் 6 வழக்குகள் 4 பிரிவுகளில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீசார் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். தற்போது இந்த குற்றப்பத்திரிகையின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இதுவரையிலான விசாரணையில் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் பின்தொடர்தல் போன்ற குற்றங்களுக்காக “விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்” என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது. மேலும், அவரது உதவிச் செயலாளர் வினோத் தோமர் “வேண்டுமென்றே உதவி” மற்றும் “வசதி” செய்ததாக டெல்லி போலீசார் அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகிறது.
இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மே 6 ம் தேதி நடந்த போலீஸ் விசாரணையின் போது, 6 பெண் மல்யுத்த வீரர்கள் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அவர்களின் சுவாசத்தை சரிபார்க்கும் சாக்கில் அவர்களின் வயிறு மற்றும் மார்பகத்தைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டுகளை, அவை 'தவறானது மற்றும் ஆதாரமற்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் முன் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து இருந்தார். அவர்களின் சுவாச முறைகளை சரிபார்க்க யோகா பயிற்சிகளை மேற்கோள் காட்டியும் உள்ளார்.
அவரது வாக்குமூலத்தின் 24 பக்க டிரான்ஸ்கிரிப்ட் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதியாகும். இது டெல்லி போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் ஒரு இணைப்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வைக் குழு விசாரணையின் போது, ஒரு மல்யுத்த வீராங்கனை பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது வயிறு மற்றும் மார்பை 3-4 முறை தொட்டு, அவரது சுவாச முறை குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்ததாக புகார் கூறினார். இருப்பினும், பிரிஜ் பூஷன், குற்றச்சாட்டை மறுத்ததோடு, சரியான சுவாசத்தை நிரூபிக்க தனது வயிற்றைத் தொட்டதாகக் கூறினார்.
எம்.சி. மேரி கோம் தலைமையிலான குழுவிடம் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், 'சம்பவம் எங்கு நடந்தது என்பதை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை' ஆனால் ஒரு போட்டியின் போது, மற்றொரு மல்யுத்த வீராங்கனை மற்றும் பயிற்சியாளருடன் சேர்ந்து, மோதலின் போது புகார்தாரர் ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று ஆச்சரியப்பட்டாதாக கூறியுள்ளார்.
"எனவே அவளது சுவாச முறை தலைகீழாக உள்ளது என்று நாங்கள் கூறினோம். மேடம், நான் இதற்கு பலியாகிவிட்டேன். சுமார் 20 வருடங்களாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. ஒரு சம்பவம் நடந்தது, என் மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டான், நான் யோகாவில் தஞ்சம் அடைந்தேன். என் சுவாச முறை தலைகீழாக இருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது.
மல்யுத்த வீராங்கனைகளும், பயிற்சியாளர்களும் என்னிடம் தலைகீழ் சுவாச முறையின் அர்த்தத்தைக் கேட்டார்கள். எனவே நான் என் வயிற்றில் என் கையை வைத்து, நாம் சுவாசிக்கும்போது, வயிறு விரிவடைந்து, சுவாசிக்கும்போது சுருங்க வேண்டும் என்பதைக் காட்டினேன். அந்த நேரத்தில் அனைவரும் தங்கள் சுவாசத்தை சரிபார்த்தனர். புகார்தாரர் <பெயர் குறிப்பிடப்படவில்லை> வந்தபோது, நான் அவளிடம், ‘மகளே நீயும் யோகாவில் சேர வேண்டும்’ என்று கூறினேன்." என்று அவர் கூறியுள்ளார்
பெண் பிசியோதெரபிஸ்ட்டிடம் புகார்தாரரின் கைகளை ஒரு நாளைக்கு 2-3 முறை மசாஜ் செய்தாரா? கேள்வி கேட்டேன். அவர் இல்லை என்றாள். எனவே, புகார்தாரரிடம் அவர் தூங்கும்போது அவரது சுவாசத்தை சரிபார்க்கிறீர்களா என்று கேட்டேன். இருந்தாலும் சிரித்தாள். அதனால் நான் வெளியே வந்து அவள் சீரியஸாக இல்லாததால் பதக்கம் வெல்வது கடினம் என்று கூறினேன்,” என்று மேற்பார்வைக் குழு விசாரணையின் போது பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.
பிசியோ கூறியது என்ன?
லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் பெண்களுக்கான தேசிய முகாமை நடத்துவதற்கான கூட்டமைப்பின் முடிவு குறித்தும் குழுவின் வெவ்வேறு உறுப்பினர்களால் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
2014ல் லக்னோவில் உள்ள முகாமில் இருந்த பெண் மல்யுத்த வீராங்கனையின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட்டான பரம்ஜீத் மாலிக், இரவு 10 அல்லது 11 மணியளவில் ஒரு கார் வந்து சில ‘ஜூனியர் மல்யுத்த வீராங்கனைகளை’ முகாமிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதாக குழுவிடம் கூறினார். இதை தலைமை பயிற்சியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மாலிக்கின் பெயர் முகாமில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பரம்ஜீத் மாலிக் கூறினார்.
தனது வாதத்தில், பிரிஜ் பூஷன் தனது அனுபவத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முகாம்களை ஒரே இடத்தில் நடத்தக்கூடாது என்று வாதிட்டார்.
“லக்னோவில் முகாமை நடத்துமாறு அதிகாரிகளிடம் நான் கூறவில்லை. அதை ஒரு தனி வளாகத்தில் வைத்திருங்கள், இல்லையெனில் அது அவர்களின் பயிற்சியை பாதிக்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். மல்யுத்த வீரர்களின் பெற்றோர்கள் கூட என்னிடம் இரண்டு முகாம்களையும் பிரிக்கச் சொன்னார்கள்,” என்று பிரிஜ் பூஷன் கூறினார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் மல்யுத்த வீரர்கள் அகாராக்கள் மற்றும் வெளிநாடுகளில் ஒன்றாகப் பயிற்சி பெறுவதால், இந்த விஷயத்தில் வீராங்கனைகளின் கருத்தை ஏன் எடுத்திருக்க கூடாது? என்று மேற்பார்வைக் குழு அழுத்தி கேட்டபோது, “இது வெளியில் நடக்காது. ஏன் சகோதர சகோதரிகள் ஒன்றாக உறங்குவதில்லை? நமக்கு ஏன் மகளிர் பல்கலைக்கழகங்கள், மகளிர் கல்லூரிகள் தனித்தனியாக உள்ளன? சகோதர சகோதரிகள் ஒன்றாக இருக்கக்கூடாது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்போது இதை சொன்னது விவாதத்தை கிளப்பியுள்ளது." என்று பதிலளித்து உள்ளார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கையாள்வதற்கு மல்யுத்த சம்மேள கூட்டமைப்பு ஏன் புகார் குழுவைக் கொண்டிருக்கவில்லை? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘இதுவரை ஒருவர் கூட அத்தகைய புகார் கொடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
"ஒரு பெண் (குழுவில்) ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று ஏதேனும் விதி வகுக்கப்பட்டால், எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் அதை நிச்சயமாக செய்திருப்போம்," என்று 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.
அத்தகைய ஒரு விதி ஏற்கனவே உள்ளது மற்றும் 2013ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவருக்கு நினைவூட்டப்பட்டபோது, அவர் "சரி, நான் செய்ய வேண்டியதை நான் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். எதிர்காலத்தில் அதைச் செய்வேன். ஒரு சம்பவம் நடக்கும் போதெல்லாம், இந்த தலைப்புகளில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன." என்று அவர் பதிலளித்து உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.