T20 World Cup 2024 | India Vs England: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரைஇறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரைஇறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி நடக்கும் கயானாவில் 80% மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றில் ஈரப்பதம் 79% ஆகவும், காற்று மணிக்கு 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரைஇறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன ஆகும்? இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
ரிசர்வ் டே இல்லை
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரை இறுதிப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டி நேரத்தை தாண்டி 60 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.
அதே நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டி முடியாவிட்டால், அதற்கு அடுத்த நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று 190 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதற்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரைஇறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாவிட்டாலும், 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்க இருப்பதால் போட்டி நேரத்தை தாண்டி கூடுதலாக 250 நிமிடங்கள் (4 மணி நேரம் 10 நிமிடங்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கும் சரிசமமாக 250 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அரை இறுதி இரவு நேரத்தில் நடப்பதால் முதல் நாள் 60 நிமிடங்களும், அதற்கு அடுத்த நாள் 190 நிமிடங்களும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இரண்டு அரை இறுதிக்கும் 250 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து அரைஇறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் எந்த அணி தனது பிரிவில் முதலிடத்தில் இருந்ததோ, அந்த அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8-ல் குரூப் 1ல் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இதேபோல், முதல் அரை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். எனினும், இந்த இரு போட்டிகளிலும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கயானா ஆடுகளம் எப்படி?
கயானா ஆடுகளம் பல ஆண்டுகளாக சுழலுக்கு உகந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், சிறந்த சுழற்பந்து வீச்சு வரிசையைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை அபாரமாக மடக்கி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கயானா ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களை ஆதரவு கொடுத்தால், நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட ரோகித் சர்மாவின் இந்திய அணிக்கு நல்ல செய்தியாக இருக்கும். அவர்கள் தங்களின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வாய்ப்புள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.