worldcup 2023 | New Zealand vs Pakistan | bangalore: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4ல் வெற்றி 3ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் +0.484 என்ற ரன்ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி எந்த பிரச்சனையும் இல்லாமல் அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட சிக்கலாகி விடும். நாளை நடக்கும் போட்டியில் பாகிஸ்தானையும், வருகிற நவம்பர் 9ம் தேதி இலங்கையும் நியூசிலாந்து எதிர்கொள்கிறது.
மறுபுறம், 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய ஏற்கனவே சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், அவர்கள் அரையிறுதி வாய்ப்பில் தொடர மீதமுள்ள இரண்டு லீக் ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் நாளை நியூசிலாந்தை, வருகிற நவம்பர் 11ம் தேதி தங்கள் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறார்கள்.
90% மழைக்கு வாய்ப்பு
/indian-express-tamil/media/post_attachments/c86f09de-37c.jpg)
இந்நிலையில், பெங்களூரில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தின் போது மழைப் பொழிவு இருக்கும் எனவும், இடியுடன் கூடிய மழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு தேவையான இரண்டு முக்கியமான புள்ளிகளைப் பெறுவதைத் தடுக்க வாய்ப்புள்ளது.
PAK vs NZ மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன ஆகும்?
நாளை பெங்களூரில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். எனவே, நியூசிலாந்து ஒன்பது புள்ளிகளுடன் இருக்கும். அதே வேளையில், பாகிஸ்தான் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில் 7 புள்ளிகளுடன் இருக்கும்.
ஆனால், அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட மாட்டார்கள். மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையாலாம்.
பாகிஸ்தானின் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைத் தவிர, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்கும் என்று அவர்கள் நம்ப வேண்டும். மேலும், அவர்கள் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா தங்கள் அடுத்த ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் நினைப்பார்கள். அதே நேரத்தில், 41வது லீக் போட்டியில் இலங்கை நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று நம்புகிறார்கள்.
இதனால், நாளை பெங்களூரில் நடக்கும் போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும். அதில் அவர்கள் தோற்றால், அவர்கள் பெரும்பாலும் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“