T20 World Cup 2024 | Indian Cricket Team: 9-வது ஆடவர் டி-20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்கிற புதிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை செவ்வாய்க்கிழமை அல்லது அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அணியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், டி20 உலகக் கோப்பை 2024-க்கான இந்திய அணி மே 1ஆம் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை சந்தித்து டி20 உலகக் கோப்பை 2024-க்கான அணியை ஆலோசித்து இறுதி செய்தது. அதனால், இந்திய அணி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் இந்திய கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவிக்கும்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் இடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால் கீப்பர் யார் என்கிற புதிர் தீவிரமடைகிறது. இரண்டாவது அல்லது பேக்அப் கீப்பர் போட்டி சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல்.ராகுலுக்கு இடையே நடக்க வாய்ப்புள்ளது.
முகமது சிராஜ், அவரது சமீபத்திய ஃபார்மில் உள்ள போராட்டங்கள் காரணமாக, ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான பந்துவீச்சு தாக்குதலில் இருந்து விலக்கப்படும் வாய்ப்பை எதிர்கொள்ளக்கூடும். நல்ல ஃபார்மில் உள்ள யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்குத் திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது மோசமான பார்முடன் போராடி வரும் ஹர்திக் பாண்டியா குறித்து பி.சி.சி.ஐ குறிப்பிடத்தக்க சிக்கலை எதிர்கொள்கிறது.
உத்தேச இந்திய டி20 உலகக் கோப்பை 2024 அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா. முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“