இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி-20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்த நிலையில், அந்த பதவியில் கம்பீரை கடந்த 9 ஆம் தேதி அன்று பி.சி.சி.ஐ நியமித்தது.
டிராவிட் ஓய்வு பெற்ற சூழலில், அவருடன் துணை ஊழியர்கள் குழுவில் இருந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர். எனவே, அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பி.சி.சி.ஐ ஈடுபட்டது. இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தையும் வழங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு எதிராக வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடருடன் அணியில் இணைகிறார்கள்.
யார் இந்த அபிஷேக் நாயர்?
அபிஷேக் நாயர் அக்டோபர் 8, 1983 இல் பிறந்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக இடது கை பேட்டிங் மற்றும் வலது கை நடுத்தர வேக பவுலிங் என ஆல்-ரவுண்டராக விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில், இவர் மும்பைக்காக விளையாடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். மேலும், இவர் நவம்பர் 2018 இல் தனது 100-வது முதல்தர போட்டியில் விளையாடினார்.
பல வருடங்களாக பயிற்சியாளராக இருந்து வரும் அபிஷேக் நாயர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வெல்ல அபிஷேக் நாயர் முக்கிய பங்காற்றி இருந்தார். கொல்கத்தா அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் பணியாற்றிய நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு அபிஷேக் நாயரை துணை பயிற்சியாளராக அழைத்து வந்துள்ளார். இதேபோல், கொல்கத்தா அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் டென் டோஸ்கேட்-வும் இந்திய அணியில் துணை பயிற்சியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இலங்கையில் நடைபெறவுள்ள சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, ஆல்-ரவுண்டர்களான அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை உதவிப் பயிற்சியாளர்களாக நியமிப்பதை உறுதிப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“