2024-25 ஆண்டுக்கான ரஞ்சி டிராபி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான எலைட் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மோதின.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்த அந்த அணி 203 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்பித் வசவதா 62 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர், எம் முகமது, சோனு யாதவ் தலா 3 விக்கெட்டையும், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Who is the new strapping Sikh pacer who led Tamil Nadu to a thumping innings and 70 run-win over Saurashtra?
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 367 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதம் விளாசிய தொடக்க வீரர் என் ஜெகதீசன் 100 ரன்களும், சாய் சுதர்சன் 82 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் ஆடிய சவுராஷ்டிரா அணி 94 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது.
சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 38 ரன்கள் எடுத்தார். மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 6 விக்கெட்டையும், சோனு யாதவ் 3 விக்கெட்டையும், கேப்டன் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தமிழ்நாடு வெற்றிக்கு உதவிய குர்ஜப்னீத் சிங் யார்?
இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றிய வீரர்களில் ஒருவர் குர்ஜப்னீத் சிங். இப்போட்டியில் அறிமுக வீரராக களமாடிய அவரால் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து கடுமையாக முயற்சித்த அவர் 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா தொடக்க வீரர் சிராக் ஜானி விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்ததாக குர்ஜப்னீத், சவுராஷ்டிராவின் முன்னணி வீரரான சேட்டேஷ்வர் புஜாராவின் விக்கெட்டை சாய்த்தார். இது சவுராஷ்டிராவுக்கு பெரும் பின்னடைவு கொடுத்தது. ஏனென்றால், புஜாரா எப்படிபட்ட வீராதி வீரன், சூராதி சூரன் என அனைவருக்கும் தெரியும். அவர் களத்தில் ஓரளவுக்கு செட் ஆகி விட்டால், எதிரணிக்கு அழுத்தம் எகிறும். அப்படிப்பட்ட முக்கிய வீரரின் விக்கெட்டை வசப்படுத்தி ஆட்டத்தில் திருப்புமுனையை கொண்டு வந்தார் குர்ஜப்னீத்.
தனது விக்கெட்டை வேட்டையை தொடர்ந்த அவர் மொத்தமாக 6 விக்கெட்டை வாரிச் சுருட்டினார். மேலும், 2வது இன்னிங்சில் 14 ஓவர்களை வீசிய அவர் 5 மெய்டன் ஓவர்கள், 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி சிறப்பாக இருந்தார். அவரது அற்புதமான பவுலிங் திறன் தமிழ்நாடு அணி அபார வெற்றியை ருசிக்க உதவியது.
ஹரியானாவின் அம்பாலா நகரில் பிறந்து வளர்ந்த குர்ஜப்னீத் சிங், பஞ்சாப் வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடிக்க பலமுறை முயற்சித்தும் அவரால் இடம் பெறவே முடியவில்லை. இதனையடுத்து, அவரது பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தனது 17 வயதில் அவர் சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். வலுவான கிரிக்கெட் கலாச்சாரத்தைக் கொண்ட இந்தக் கல்லூரியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தொடர்ந்தார்.
ஆஷிஷ் நெஹ்ரா போல் பந்துகளை வீசும் அவர் விஜய் சி.சி-க்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கான நெட் பந்து வீச்சாளராக தேர்வானார். அதன்பிறகு லீக் போட்டிகளில் ஆடி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்டு டிவிஷனில் விளையாடினார். அதைத் தொடர்ந்து அவர் 2021 இல் விஜய் சி.சி அணிக்காக விளையாடுவதற்கு முன்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.
கோலியை காலி செய்த குர்ஜப்னீத் சிங்
குர்ஜப்னீத் சிங், கடந்த மாத இறுதியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்தியாவின் பயிற்சி அமர்வுகளின் போது, வலைப் பயிற்சியில் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு பந்து வீசினார். அப்போது அவர் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை குர்ஜப்னீத் சிங் கொண்டாடாத நிலையில், அவரின் சில பந்துகளை டிரைவ் அடித்தார் கோலி. பிறகு, இளம் வீரரான குர்ஜப்னீத் சிங்கிற்கு சில அறிவுரைகளையும் கொடுத்தார்.
இதுபற்றி குர்ஜப்னீத் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் அவரை அவுட் எடுத்த பிறகு, நான் அவரைப் பார்த்தேன், மீண்டும் அவரைப் பார்க்க என்னிடம் தைரியம் இல்லை. அவர் மிகவும் கோபமாக இருந்தார். ஆனால் அவர் எல்லாவற்றையும் விட தன் மீது கோபமாக இருப்பதை உணர்ந்தேன். டிரைவ் ஆடிய பிறகு, அவர் மீண்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
அவர் என்னிடம், எந்தவித மூமென்ட் இல்லாதபோது, பந்தின் கோணத்தை மாற்றி விக்கெட்டைச் சுற்றி பந்துவீச முயற்சிக்கவும் என்றார். ஏனென்றால், அந்த கோணத்தில், நீங்கள் சிறிதளவு மூமென்ட்டைப் பெற முடியும். அது பெரும்பாலான பேட்ஸ்மேன்களைத் தொந்தரவு செய்யும் என்றும் என்னிடம் சொன்னார்." என்று அவர் கூறினார்.
புஜாராவை எல்.பி.டபிள்யூ ஆக்கி டக்-அவுட் செய்த குர்ஜப்னீத் சிங் மேலும் பேசுகையில், “அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்கு நீங்கள் பந்துவீசும்போது, துல்லியமாக இருக்க வேண்டும். எனவே அவரை பின்காலில் தள்ளிவிட்டு, அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு நல்ல முன் கால் பந்தை அனுப்புவதுதான் திட்டம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் போனதால், பாலா பாய் (எல் பாலாஜி) என்னை ஒரு விக்கெட்டைத் தேடி வெளியே பந்து போடச் சொன்னார், ஏனெனில் நான் திட்டத்திலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் ஆடுகளம் அதிக வாய்ப்பை வழங்காததால், ஸ்டம்புகளைச் சுற்றி வந்து பந்து வீசுவது சிறந்த தேர்வாக இருந்தது, மேலும் காலை அமர்வில் (ஜெய்தேவ்) உனத்கட் அதையே செய்வதைப் பார்த்தோம்." என்று கூறினார்.
தொடர்ந்து தனது கிரிக்கெட் பயணம் பேசிய குர்ஜப்னீத் சிங், “எனக்குத் தெரிந்தது கிரிக்கெட் மட்டுமே, பஞ்சாபில் உங்களுக்கு அதே வசதிகள் கிடைப்பதில்லை. கிரிக்கெட்-டுக்குள் எவ்வாறு நுழைவது என்பது இங்கே உங்களுக்குத் தெரியும். ஆனால், அங்கு அதே நிலை இல்லை, ஏனெனில் தேர்வுப் பாதைகள், முகாம்கள் மற்றும் பலவற்றில் நீங்கள் முற்றிலும் இருட்டில் இருக்கிறீர்கள். அதனால் சென்னைக்கு வருவது எனக்கு சிரமமாக இல்லை.
பாகிஸ்தான் அணியிடம் எப்போதும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு முகமது அமீர் மிகவும் பிடிக்கும். அதேபோல், அக்தர், ஆசிப் மற்றும் நிச்சயமாக வாசிம் அக்ரம் ஆகியோரையும் எனக்குப் பிடிக்கும். பஞ்சாபில், மூத்தவர்கள் பந்துவீச்சு இயந்திரங்களை எதிர்கொள்ள முடியாதபோது, இளையவர்கள் இயந்திரங்களாக மாறுகிறார்கள். மேலும் வேகமாக பந்துவீசுவது எனது சிறந்த தேர்வாக இருந்தது.
கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் போது, இந்த விஷயங்கள் கலாச்சாரம் பொருட்டல்ல. நிச்சயமாக, நிறைய கலாச்சார வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதுவும் நம் தேசத்தின் ஒரு பகுதியாகும். பன்முகத்தன்மைதான் நம்மைச் சிறப்புறச் செய்கிறது. நான் இப்போது அவர்களில் ஒருவன். நிச்சயமாக, அவர்கள் இன்னும் என்னை பஞ்சாபி இசையை இசைக்க விடவில்லை, ஆனால் நான் விஜய் மற்றும் அனிருத் பாடல்களுக்குப் பழகிவிட்டேன்." என்று குர்ஜப்னீத் சிங் கூறியுள்ளார்.
சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில், டி.என்.சி.ஏ-வின் கவுரவப் பட்டியலில், ஏஜி ராம் சிங், ஏஜி கிருபால் சிங், ஏஜி மில்கா சிங், ஏஜி சத்வேந்தர் சிங், அர்ஜன் கிரிபால் சிங் ஆகியோரின் பெயர்கள் தனி இடம் பிடித்துள்ளன. பல தசாப்தங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வேகப்பந்து வீச்சு வரிசை சுருங்கி வரும் சூழலில், சீக்கிய பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல குர்ஜப்னீத் சிறந்த நேரத்தில் வந்துள்ளார்.
இரு அணிகளின் லெவன் வீரர்கள் பட்டியல்:
தமிழ்நாடு: சாய் சுதர்சன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா இந்திரஜித், பூபதி குமார், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த் சி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால், குர்ஜப்னீத் சிங், எம் முகமது, சோனு யாதவ்
சவுராஷ்டிரா: ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), சிராக் ஜானி, சேதேஷ்வர் புஜாரா, பிரேரக் மன்கட், ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வசவதா, ஜெய்தேவ் உனட்கட் (கேப்டன்), யுவராஜ்சிங் தோடியா, நவ்நீத் வோரா, தர்மேந்திரசிங் ஜடேஜா, பார்ஸ்வராஜ் ராணா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.