இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கி நடக்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமாடிய நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி ரோகித் 6 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதன்பிறகு வந்த கோலியும் 6 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் அணியின் விக்கெட் சரிவை மீட்டார். அவர் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடம் ஜோடி அமைத்து சிறப்பாக மட்டையை சுழற்றி வந்தார். 52 பந்துகளில் 6 பவுண்டரிகளை விரட்டிய அவர் 39 ரன்னில் அவுட் ஆனார். டாப் ஆடரில் இந்த வீரர்கள் விக்கெட்டையும் வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத் என்கிற 24 வயதான இளம் வீரர் தான் சாய்த்து மிரட்டினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்து வந்த கே.எல் ராகுலுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெது மெதுவாக ரன்களை எடுத்து வந்தது. இதில் அரைசதம் அடித்து அசத்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டி 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் நஹித் ராணா பந்தில் ஷத்மன் இஸ்லாம் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருடன் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்த கே.எல் ராகுல் 52 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 16 ரன்னுக்கு அவுட் ஆனார். தற்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா களத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“