மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், பாரிஸ் பாராஒலிம்பிக் ஆண்கள் பாரா ஜூடோவில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடினார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் கபில் பர்மார் 10-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் பாரா ஜூடோவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
யார் இந்த கபில் பர்மார்?
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவோர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கபில் பர்மார். இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு இளைய சகோதரி உள்ளார்கள். அவரது தந்தை ஒரு டாக்ஸி டிரைவர். அவரது சகோதரி ஆரம்ப பள்ளி ஒன்றை நடத்துகிறார். ஜூடோ பயிற்சி செய்யும் அவரது நடுத்தர சகோதரர் பெரும்பாலும் கபிலின் பயிற்சி கூட்டாளியாக இருக்கிறார்.
கபில் பர்மார் குழந்தையாக இருந்தபோது, அவர் தனது கிராமத்தின் வயல்களில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் தவறுதலாக மோட்டார் பம்பைத் தொட்டுள்ளார். இதன் விளைவாக கடுமையான மின்சாரம் அவரைத் தாக்கியுள்ளது. அவர் மயக்கமடைந்து போபாலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆறு மாதங்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.
அவர் குணமடைந்ததைத் தொடர்ந்து, உடல் எடையை அதிகரிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த காலகட்டத்தில்தான் அவர் தனது வழிகாட்டி மற்றும் பயிற்சியாளர்களான பகவான் தாஸ் மற்றும் மனோஜ் சர் ஆகியோரின் ஊக்கத்தின் மூலம் ஜூடோவைக் கண்டுபிடித்தார்.
தடகள வீரராக உருவெடுத்த கபில் பர்மார் ஆசிய பாரா விளையாட்டு 2022 இல் வெள்ளிப் பதக்கத்தையும், 2019 இல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கத்தையும் வென்றுள்ளார். மேலும் 2024 இல் ஐ.பி.எஸ்.ஏ ஜூடோ கிராண்ட் பிரிக்ஸ் ஆண்டலியாவில் தங்கம் மற்றும் ஐபிஎஸ்ஏ ஜூடோ கிராண்ட் பிரிக்ஸ் டிபிலிசியில் தங்கம் வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், அவர் ஐபிஎஸ்ஏ ஜூடோ கிராண்ட் பிரிக்ஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் மற்றொரு தங்கத்தை வென்றார். 2023 இல் ஐபிஎஸ்ஏ உலக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.