இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் நியமனம் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு உதவி செய்ய, பந்துவீச்சு பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் யார் யார் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் உட்பட பல பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமாருடன், கே.கே.ஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் வருவார் என கம்பீர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் அடுத்த பந்துவீச்சு பயிற்சியாளரைத் தீர்மானிப்பதில் கம்பீர் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தலை அசைக்காது என்று கூறுகிறது. உண்மையில், கம்பீரின் முன்னாள் இந்திய அணி வீரர்களில் ஒருவரை - உலகக் கோப்பை வென்ற அணி வீரர் - ஜாகீர் கான் பெயரைத் தேர்வு செய்வதில் பி.சி.சி.ஐ ஆர்வமாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், பி.சி.சி.ஐ-யின் பார்வையில் இருக்கிறார். மேலும், இந்த போட்டியில் ஜாகீர் கான் அனைவரையும் பின்னுக்கு தள்ளலாம். பந்துவீச்சு பயிற்சியாளர்களுக்கான பெயர்களில் போட்டியில் ஜாகீர் கான் இருக்கிறார் என்பது கம்பீருக்கு நன்றாகத் தெரியும்.
“பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜியின் பெயர்களை பி.சி.சி.ஐ ஆலோசித்து வருகிறது. வினய் குமார் பெயரில் பி.சி.சி.ஐ ஆர்வம் காட்டவில்லை” என்று ஏ.என்.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜாகீர் கான் சர்வதேச போட்டிகளில் 610 விக்கெட்டுகளுடன் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கினார். 2011 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது 21 விக்கெட் எடுத்திருந்தார். 2014-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜாகீர் கான், முன்னணி இணையதளத்தில் ஒளிபரப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி அமைப்பில் ஒரு பகுதியாக இருந்தார்.
அதே போல, லட்சுமிபதி பாலாஜி சர்வதேச போட்டிகளில் 71 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தவர், ஆனால், அவரது பயிற்சி அனுபவம் நிறைந்தது. 2016-ல் ஓய்வு பெற்ற பிறகு, லட்சுமிபதி பாலாஜி பயிற்சியாளராகப் பணியாற்றினார். 2017-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பின்னர் 5 சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.