இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. ஜூலை 28, 29, 31 ஆகிய தேதிகளில் நடக்கும் 3 டி20 போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதேபோல், ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடக்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், 3 ஃபார்மெட்டிலும் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா, கடந்த மாதத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வென்ற பிறகு சர்வதேச டி20-யில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அவர் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை வழிநடத்துவார் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். இதனால், இந்திய டி20 அணியின் தலைமை பொறுப்பு யாரிடம் செல்லப் போகிறது? ரோகித் சர்மா இடத்தை நிரப்ப போவது யார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய இளம் அணியை வழிநடத்திய சுப்மன் கில் அணி 4 - 1 என்ற கணக்கில் அணி தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தார். இதன்மூலம், தனக்கும் இந்திய கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்தும் தகுதி இருக்கிறது என்பதை வெளியுலகிற்கு வெளிக்காட்டி இருக்கிறார்.
அதேநேரத்தில், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய, குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியா, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது, ரோகித் சர்மாவுக்குப் பின் அவர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால், ஹர்திக் ஒரு வீரராக தன்னை நிரூபித்து இருந்தாலும், கேப்டனாக இன்னும் தன்னை அவர் நிரூபிக்கவில்லை என்கிற கவலையும் இருக்கிறது.
ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியை 2 சீசன்களாக (2022 சாம்பியன், 2023 இறுதிப்போட்டி) வெற்றிகரமாக வழிநடத்திய ஹர்திக், இந்த சீசனில் மும்பை இந்தியசுக்கு டிரேடு முறையில் தாவி, பிறகு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் மீது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. தொடர் முழுதும் அது தொடரவும் செய்தது. அவர் சென்ற மைதானமெல்லாம் அவருக்கு எதிரான முழக்கம் ஒலித்தது. முன்னாள் வீரர்கள் பலரின் அறிவுறுத்தலின் பேரில் அது இடையில் கைவிடப்பட்டது.
மறுபுறம், கேப்டனாக ஹர்திக்கிற்கு அது நல்ல சீசனாகவும் அமையவில்லை. அவரது கேப்டன்சி மீது அணிக்குள் சலசலப்பு நிலவியது. ஹர்திக் பற்றி அணியில் இருந்த மூத்த வீரர்கள் அணி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் பின்னடைவைக் கொடுத்தது. இந்த தொடரில் 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வென்ற மும்பை அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தவாறு தொடரை நிறைவு செய்தது. இதனால், ஐ.பி.எல் வட்டாரத்தில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியை அதள பாதாளத்திற்கு அழைத்துச் சென்றவர் என்கிற அவப்பெயருடன் ஹர்திக் வலம் வருகிறார்.
இந்த சூழலில் தான், ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கலாமா? அல்லது வேண்டாமா? அவரது இந்திய டி20 கிரிக்கெட் எதிர்காலம் என்ன? உள்ளிட்டவை குறித்த முடிவுகளை எடுப்பது பற்றி, இலங்கை தொடருடன் தனது பணியைத் தொடங்கவிருக்கும் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் - தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.
"அணி அமைப்பு தொடர்பாக அவர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. கவுதம் எதிர்காலத்திற்காகவும் திட்டமிட வேண்டும். குறிப்பாக 2026 டி20 உலகக் கோப்பை. ஹர்திக் நிச்சயமாக ஒரு பெரிய விவாதப் பொருளாக இருக்கிறார். கவுதம் மற்றும் ஹர்திக் ஆகிய இருவருக்கும் அவரது ரோல் குறித்த தெளிவு வேண்டும்” என்று பி.சி.சி.ஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுடன் கேப்டன்சி ரேஸில் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களும் உள்ளனர். இதனால், இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை முடிவு செய்வதில் சற்று சிரமம் ஏற்படலாம். அதுபற்றி ஆழ்ந்த கிரிக்கெட் அறிவு கொண்டவராக பெரிதும் மதிக்கப்படும் கம்பீர் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.