க.சண்முகவடிவேல்
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவுக்கு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.
பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய அணி துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் பிரிவுக்கு தகுதி பெற்று இருப்பதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பிரித்விராஜ் தொண்டைமான் பற்றிய சுவரசியாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
யார் இந்த பிருத்திவிராஜ்?
1987 ஜூன் மாதம் 6 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் பிருத்விராஜ் தொண்டைமான். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த ரகுநாத ராய தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகன் ஆவார். ராஜகோபால தொண்டைமான் டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் பிரிவில் பறந்து செல்லும் தட்டுகளை குறிபார்த்து சுடுவதில் வல்லவர்.
இதே போல அவரது மகன் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் டிராப் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர் என்று அறியப்படும் பிருத்விராஜ் தொண்டைமான் ட்ராப் ஷூட்டர் பிரிவில் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
2023 மார்ச் மாதம் தோஹா ISSF ஷாட்கன் உலகக் கோப்பை ஷாட்கன் ஆடவர் ட்ராப் போட்டியில் வெண்கலப் பதக்கம் (இந்த போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பிரித்விராஜ் தொண்டைமான்) வென்றுள்ளார். தற்போது, பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக பிரித்திவிராஜ் தெரிவிக்கையில்; "பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவேன். ஆனால் அது ஒரு குழு போட்டி, என்னுடைய பெயர் தனித்துவமாக இருப்பது போன்ற ஒரு விளையாட்டை நான் தேர்ந்தெடுக்க விரும்பினேன். அப்பா துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது நானும் அவருடன் சேர்ந்து சென்றிருக்கிறேன். அப்படித்தான் நானும் துப்பாக்கி சுடுவதை கற்றுக்கொண்டேன்.
1992ல் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாதாராணமாக பங்கேற்றேன், அதில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதும் பலரும் பாராட்டினர். அதுவே எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது, இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை என்னுடைய இலக்காக்கினேன்.
மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்கிற பெருமையைத் தாண்டி தான் விளையாட்டில் தனிப்பெருமை சேர்க்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பில் இருந்தே துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்.
என்னுடைய கனவு மற்றும் 4 வருடங்களாக கடினமாக பயிற்சி எடுத்துக்கொண்டதன் பலனை இப்போது நான் அடைந்திருக்கிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபெற தகுதி பெற்றிருக்கும் இந்த தருணம் நான் மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம். இந்தியாவில் இருந்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு சார்பாக ஒலிம்பிக்கில் விளையாடப் போவது எனக்கு மிகப்பெரிய பெருமை.
முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தான் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 4 பதக்கங்களை வென்றிருக்கிறேன். அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு நிச்சயமாக அதற்கான கடின உழைப்பை செலுத்த நான் தயாராக இருக்கிறேன்.
சுமார் 15 ஆண்டுகளாக நான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த முறை உலகக் கோப்பையில் 2 பதக்கங்களை வென்றேன், ஆசிய விளையாட்டுகளிலும் பதக்கம் பெற்றிருக்கிறேன், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 4 ஆண்டுகளாக தயாராகி வருகிறேன். நிச்சயமாக பதக்கத்தை வெல்வேன்" என்று உறுதியோடு கூறியிருக்கிறார் பிரித்விராஜ்.
தமிழகத்திற்கு பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரித்விராஜ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.