PV Sindhu Marriage, Date, Venue, Husband Name, Reception: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள அவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ரியோ 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
இதன்பிறகு, 2021 ஆம் ஆண்டில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் அவர் பெற்றார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில், இந்திய அரசாங்கம் அவருக்கு 2020 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதை வழங்கியது.
சிந்துவுக்கு திருமணம்
இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை திருமணம் செய்யவிருக்கும் வெங்கட தத்தா சாய் குறித்தும், அவரது பின்னணி என்ன என்பது பற்றியும் இங்குப் பார்க்கலாம்.
வெங்கட தத்தா சாய் யார்?
பி.வி சிந்துவை திருமணம் செய்யப் போகும் வெங்கடா தத்தா சாய் தற்போது போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜி.டி வெங்கடேஷ்வர் ராவின் மகன் ஆவார். இந்த நிறுவனத்தின் புதிய லோகோவைத் தான் கடந்த மாதம் பி.வி சிந்து வெளியிட்டார்.
சாய் லிபரல் அண்ட் மேனேஜ்மென்ட் எஜுகேஷன் அறக்கட்டளையில் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்/லிபரல் ஸ்டடீஸில் டிப்ளமோ பெற்றுள்ளார். பின்னர் அவர் பிலேம் (FLAME) பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் இளங்கலை வணிக நிர்வாகத்தை (BBA) படித்து 2018 இல் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு அறிவியல் மற்றும் இயந்திர கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஜே.எஸ்.டபிள்யூ போன்ற பெரிய நிறுவனங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.சோர் ஆப்பிள் அசெட் மேனேஜ்மென்ட்டில் மேனேஜிங் நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். டிசம்பர் 2019 முதல் போசிடெக்ஸ் டெக்னாலஜி நிறுனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணம் எப்போது?
பி.வி சிந்துவுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்வுகள் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுபற்றி சிந்துவின் தந்தை பி.வி. ரமணா பேசுகையில், "இரு குடும்பத்தினரும் முன்பே நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து விசயங்களும் முடிவாகின. இதன்படி, வருகிற 22-ந்தேதி உதய்ப்பூரில் சிந்துவின் திருமணம் நடைபெற உள்ளது.
ஜனவரியில் இருந்து சிந்துவுக்கு, விரைந்து செய்வதற்கென்று நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அதனால், இதுவே சாத்தியப்பட்ட ஒரே வழி. இரு குடும்பங்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20 ஆம் தேதியே தொடங்கி விடும். 24 ஆம் தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். சிந்து விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார். ஏனெனில் அடுத்து வர கூடிய போட்டிகள் அவருக்கு முக்கியம் வாய்ந்தவை." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.