ஜிம்போ... ஜிம்போ....
மைதானத்தில் அங்கும் இங்கும் ஒரு மலை மனிதர் ஓடிக் கொண்டிருக்க, அவரை இப்படித்தான் அழைக்கின்றனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். அழைப்பது தான் இப்படியென்றால், அவரை அருகில் அழைத்து பேசும் போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தலை புரோட்ராக்டரின் 90 டிகிரி திசையில் உயர, இந்திய வீரர்களின் நிலைமையை யோசித்துக் கொள்ளுங்கள். சரி தலை தான் 90 டிகிரிக்கு உயருகிறது என்றால், அவரது உடல் அகலத்தை இரண்டு கண்களும் பார்க்க வேண்டுமெனில், 0 டூ 180 டிகிரிகளுக்கு விரிய வேண்டியிருக்கிறது.
யார் இந்த ரஹ்கீம் கார்ன்வால்?
ஆண்டிகுவாவைச் சேர்ந்த 140 கிலோ கிரிக்கெட் வீரருக்கு தான் இவ்வளவு பில்டப். நபரும் அதற்கு ஒரத் தான். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான 26 வயதான ரஹ்கீம் கார்ன்வால், அதிக உடல் எடை மிக்க டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எனும் பெயரை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய கேப்டன் வார்விக் ஆர்ம்ஸ்டிராங் 133-139 கிலோ எடையோடு விளையாடி தக்க வைத்திருந்த சாதனையை தகர்த்திருக்கிறார் ரஹ்கீம்.
வெயிட்டான வீரர் என்பது வெறும் வார்த்தையளவு மட்டுமல்ல... களத்திலும் தான். ஆஃப் ஸ்பின்னரான ரஹ்கீம், வெயிட்டான சிக்ஸர்களையும் பறக்கவிடக் கூடியவர். உள்நாட்டு கிரிக்கெட்டில், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி வருவது இங்கு கவனிக்கத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஷிப்ஸ் 2018-19 தொடரில், கார்ன்வால் 54 விக்கெட்டுகளை கைப்பற்றி, பேட்டிங்கில் 17.68 ஆவரேஜும் வைத்திருந்தார்.
தவிர, தனது முதல் தர கிரிக்கெட்டில், 55 போட்டிகளில் ஆடியிருக்கும் ரஹ்கீம் 2224 ரன்களும், 260 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். ஆவரேஜ் 23.90. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அணி சார்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டம் ஒன்றில், தனது ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்சை ரஹ்கீம் வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில், 41 ரன்கள் எடுத்த ரஹ்கீம், இந்திய வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே உள்ளிட்ட ஐந்து விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1829-300x217.jpg)
அதே அணிக்காக, 2017ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் எடுத்து, 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இவரது இந்த ஆட்டம், 55-5 என்ற மோசமான நிலையிலிருந்த அணியை 233 ரன்களுக்கு இட்டுச் சென்றது.
நீண்ட போராட்டத்திற்கு சர்வதேச அணியில் இடம் கிடைத்திருக்கும் ரஹ்கீம், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரவை 6 ரன்களில் வெளியேற்றி தனது கணக்கை தொடங்கியிருக்கிறார்.
உயரத்தில் மட்டுமே அண்ணாந்து பார்க்க இடம் அளிக்காமல், சாதனைகளிலும் தன்னை அண்ணாந்து பார்க்க ஜிம்போவுக்கு வாழ்த்துகள்.