worldcup 2023 | indian-cricket-team: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
ஆனால், மீதமுள்ள 4வது இடத்தைப் பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த 4 அணிகளில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுகிறதோ, அந்த அணி முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று மொத்தம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் என்பது உறுதியாகி விட்டது. அதேசமயம், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்றாமிடத்திற்குக் கீழே முடிக்க முடியாது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், பாகாப்பு காரணம் கருதி முதல் அரையிறுதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். ஒருவேளை, நியூசிலாந்து, நெதர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி போட்டியானது நவம்பர் 15-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.
தற்போதைய நிலவரப்படி, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் மோத அந்த அணிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
நியூசிலாந்து:
நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 9-ம் தேதி) பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இலங்கையை வீழ்த்தினால் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
நவம்பர் 11-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ, நவம்பர் 10-ம் தேதி அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தாலோ நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
இதேபோல், இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் தங்கள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற வேண்டும் என நம்புவார்கள். அதனால், அந்த அணிகளின் நெட் ரன்ரேட் சரிந்து நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை பெற வழிவகுக்கும்.
பாகிஸ்தான்:
நவம்பர் 11-ம் தேதி இங்கிலாந்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதற்கு முன் நவம்பர் 9-ம் தேதி நடக்கும் போட்டியில் நியூசிலாந்தை இலங்கை அணி வீழ்த்த வேண்டும். மேலும், நவம்பர் 10-ம் தேதி தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு 10 புள்ளிகள் கிடைக்கும். அதே சமயம் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 8 புள்ளிகளுடன் இருக்கும்.
ஒருவேளை பாகிஸ்தான் தோற்றால், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்கள் எஞ்சிய ஆட்டங்களில் மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும். மேலும், அந்த அணிகளின் நெட் ரன்ரேட் பாகிஸ்தானுக்குக் கீழே குறைய வேண்டும்.
ஆப்கானிஸ்தான்:
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானை விட ஆப்கானிஸ்தானின் நெட் ரன்ரேட் மோசமாக உள்ளது. அதனால், அவர்கள் நவம்பர் 10 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்தால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் அவர்களுக்கும் மேலும் ஒரு வாய்ப்பும் உள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானின் கடைசி லீக் ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டால், அது அவர்களுக்கு சாதமாக இருக்கும்.
நெதர்லாந்து:
நெதர்லாந்து அணி தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை மிக பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் மிக பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
இதுபோன்ற சூழ்நிலையில், நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெறும், மேலும் நெதர்லாந்தின் நெட் ரன் ரேட் மற்றவர்களை விட சிறப்பாக இருந்தால், அவர்கள் தகுதி பெற்று நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் இந்தியாவுக்கு எதிரான கனவான அரையிறுதிப் போட்டியில் களமிறங்கலாம்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிக்கான வரிசை ஏற்கனவே சீல் செய்யப்பட்டு விட்டது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையாக தென் ஆப்பிரிக்காவை அரையிறுதியில் சந்திக்கிறது. இதற்கு முன்பு இரு அணிகளும் 1999 மற்றும் 2007 உலகக் கோப்பைகளின் அரையிறுதியில் எதிர்கொண்டது. இந்த 2 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.