MS Dhoni - Tami Nadu Premier League Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 7வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் போன்ற மூத்த வீரரும் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களும் களமாடி வருகிறார்கள்.
Advertisment
இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவதால், ஐபிஎல் தொடரில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியும் இடம்பெற முடியுமா என்று ஏராளமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அவர் போட்டியில் விளையாட முடிவு செய்தால் எந்த அணிக்காக விளையாடுவார்? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகிறார்கள்.
இருப்பினும், இந்த தொடரில் தோனியால் பங்கேற்று விளையாடமுடியாது. அவரே நினைத்தாலும் கூட நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கலந்து கொள்ள முடியாது. காரணம் எளிமையானது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட 2018ல், எந்த வெளிமாநில வீரர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடந்தும் இந்த தொடரில் பங்கேற்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. உன்முக்த் சந்த் மற்றும் ஷெல்டன் ஜாக்சன் உட்பட மொத்தம் 16 வெளிமாநில வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட ஆர்வம் தெரிவித்து தங்களின் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
Advertisment
Advertisements
ஆனால் "வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை" என்ற விதியின் காரணமாக அவர்களால் டி.என்.பி.எல். தொடரில் இடம்பெற முடியவில்லை. ஒரு வீரர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் விளையாடினால் மட்டுமே அவர் இந்த தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவார். சந்தீப் வாரியர் 2018ல் வெளிமாநில வீரராக இருந்தார். ஆனால் அவர் இப்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடுகிறார்.
தோனி இந்த தொடருக்கான போட்டியை பார்க்க விரும்பினால் அவருக்கு நிச்சயம் பெரும் வரவேற்பு கிடைக்கும். ஆனால் அவர் விரும்பினால் கூட லீக் போட்டியில் விளையாட முடியாது. ராஞ்சியில் வசிக்கும் தோனி, ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க வீரராக பதிவு செய்துள்ளார். அவர் இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020ல் அவர் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய அவரது தலைமையிலான சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் 5முறை கோப்பை வென்ற அணியாக வலம் வருகிறது.
'தல' தோனி அடுத்த சீசனிலும் களமாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நிச்சம் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என சென்னை அணியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். நடப்பு சீசனின் போது அவர் முழங்கால் காயத்தால் அவதியுற்றார். அதற்காக மும்பையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி தற்போது ஓய்வு நேரத்தை அனுபவித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil