உலகக் கோப்பைத் தொடரில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? தல தோனி அடிக்கடி தனது பேட் ஸ்டிக்கரை மாற்றிக் கொண்டே இருக்கிறார். இத்தொடரில், கிட்டத்தட்ட இதுவரை மூன்று முறை பேட் ஸ்டிக்கரை மாற்றி, வெவ்வேறு நிறுவனங்களின் லோகோவுடன் ஆடி வருகிறார்.
கடைசியாக நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் SG லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட்டுடன் விளையாடியவர், அதே ஆட்டங்களில் சில ஆக்ரோஷமான ஷாட்களை ஆட BAS லோகோ ஸ்டிக்கர் கொண்ட பேட்களை கொண்டுவரச் செய்து ஆடினார்.
இதுகுறித்து தோனியின் மேனேஜர் அருண் பாண்டே கூறுகையில், "வெவ்வேறு பிராண்ட் கொண்ட பேட்களை தோனி பயன்படுத்துவது உண்மை தான். ஆனால், அதற்காக அவர் ஊதியம் பெற்றுக் கொள்வதில்லை. தனது கரியரின் பல்வேறு தருணங்களில் தன்னுடன் பயணித்த அந்த நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு பயன்படுத்துகிறார்.
தோனிக்கு மிகப்பெரிய மனம் உள்ளது. அவருக்கு பணம் முக்கியமல்ல, அது அவரிடம் தேவைப்படும் அளவுக்கு உள்ளது. நல்லெண்ண அடிப்படையில் அவர் அந்த பேட்களை பயன்படுத்தி வருகிறார். அவரது ஆரம்பக் கட்ட களத்தில் இருந்து BAS நிறுவனம் அவருடன் பயணித்து வந்தது. SG-யும் அவருக்கு உதவிகரமாக இருந்தது" என்றார்.
பொதுவாக, பேட்ஸ்மேன்கள் இதுபோன்ற தங்களது பேட்களில் ஸ்பான்சர்ஸ் பெயரை பயன்படுத்த, வருடத்திற்கு 4-5 கோடி வரை ஊதியமாக பெறுவது வழக்கம். தோனிக்கு, தற்போது யாரும் ஸ்பான்சராக இல்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனமான SPARTAN நிறுவனத்துடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்தம் சில சட்ட சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.