worldcup 2023 | indian-cricket-team: இந்திய மண்ணில் நடைப்பெற்று வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் இந்தியா (+1.405) புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியா விளையாடிய ஆட்டங்களில் ஆறிலுமே வெற்றி பெற்றதால், 12 புள்ளிகளை பெற்று எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
இருப்பினும், இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்னும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. தவிர புள்ளிகள் பட்டியலில் கடைசி 10வது இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து அணி வரை அரையிறுதிக்கு தகுதி வாய்ப்பை கொண்டுள்ளது. இதனால், முதல் 4 இடத்தைப் பிடிக்கும் போட்டியில் 10 அணிகளுமே உள்ள எனலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: Why India is not in the semifinals yet despite winning six out of six games
அரையிறுதிக்கு தகுதி பெற எத்தனை புள்ளிகள் வேண்டும்?
இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு அணி அரையிறுதி இடத்தை முழுமையாக உறுதிப்படுத்த 14 புள்ளிகள் தேவைப்படும். 12 புள்ளிகள் இருந்தால் கூட முதல் 4 இடத்தை உறுதிப்படுத்தி விடலாம். ஆனால் அதற்கு மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான விதியை தங்கள் கைகளில் வைத்துள்ளன.
இந்தியா
போட்டிகள்: 6 - புள்ளிகள்: 12
இந்தியாவைப் பொறுத்தவரை, எஞ்சியிருக்கும் 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். ஏனெனில், முதல் 4 இடங்களுக்கு வெளியே உள்ள எந்த அணியும் 14 புள்ளிகளை எடுக்க முடியாது. இந்தியா அந்த 3 போட்டிகளிலும் தோற்றாலும் கூட, அரையிறுதிக்குள் நுழைய முடியும்.
இந்தியா 3 போட்டிகளில் தோற்றால் 12 புள்ளிகளுடன் முடிக்கும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றால் 12 புள்ளிகளுடன் முடிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், நெட் ரன்ரேட்டில் இந்தியா ஆப்கானிஸ்தானை முந்திச் சென்று விடும். எவ்வாறாயினும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி விடும்.
தென் ஆப்பிரிக்கா
போட்டிகள்: 6 - புள்ளிகள்: 10
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா டாப் 4 இடத்தைப் பிடிக்க அந்த அணிக்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவை.
தென் ஆப்பிரிக்கா மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 5 முதல் 8வது இடம் வரை இருக்கும் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைந்தால், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
3 போட்டிகளிலும் தோற்றால், தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும்.
நியூசிலாந்து
போட்டிகள்: 6; புள்ளிகள்: 8
புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி இருந்து வந்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து பெற்ற இரண்டு தொடர்ச்சியான தோல்விகள் அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளன. ஆனால் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
அந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக, நியூசிலாந்து அணியினர் சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.
ஆஸ்திரேலியா
போட்டிகள்: 6; புள்ளிகள்: 8
நியூசிலாந்தைப் போலவே, ஆஸ்திரேலியா அணி இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு தான் 3 எளிதான ஆட்டங்கள் (இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம்) உள்ளது.
ஆஸ்திரேலியா அதன் பரம எதிரியான இங்கிலாந்தை வீழ்த்தினால், இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறி விடும். இப்போட்டியானது வருகிற நவம்பர் 4ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.
ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால், 10 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக இருக்கும்.
மற்ற அணிகளின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் கூட முதல் 4 இடங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வென்று 12 புள்ளிகளுடன் முடித்தால், அவர்களுக்கு நிச்சயமான வாய்ப்பு கிடைக்கும். நெதர்லாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானும் கூட தங்களின் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் முடிக்கலாம்.
மிகவும் சிக்கலான சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், பாகிஸ்தானும், இலங்கையும் மூன்றிலும் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்றால், தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகளிலும் தோற்றால், 6 அணிகள் 10 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது அவர்களின் நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.