T20 World Cup 2024 | United States vs India: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று புதன்கிழமை நியூயார்க்கில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு அமெரிக்கா 110 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.குமார் 27 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 111 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 18.2-வது இலக்கை எட்டிப்பிடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: T20 World Cup: Why India were awarded 5 penalty runs in run-chase against USA in New York
இந்திய அணியில் அதிபட்சமாக கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். துபே 35 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். தனது தரமான பவுலிங்கை வெளிப்படுத்தி 4 விக்கெட்டை வாரிச் சுருட்டிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
5 பெனால்டி ரன்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது ஏன்?
இந்நிலையில், நியூயார்க்கில் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தான் அமெரிக்க அணி ஒரு தவறை செய்து ஐந்து ரன்களை இந்திய அணிக்கு இலவசமாக கொடுத்தது.
ஐ.சி.சி விதி
நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவரை முடித்த பின் அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் வீச தொடங்கி விட வேண்டும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த விதியை நீங்கள் ஒரு போட்டியில் 3 முறை மீறினால், உங்களுக்கு ஐந்து ரன்கள் பெனாலிட்டியாக கொடுக்கப்படும் என்று விதி கூறுகிறது.
இதன்படி, நேற்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணி மூன்று முறை தாமதமாக ஓவர்களை வீச தொடங்கியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் இலவசமாக கிடைத்தது. இதனால் இந்திய அணி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற நிலை உருவானது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“