MS Dhoni - Indian Cricket Team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுற்ற சூழலில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் கோப்பை வென்று கொடுத்தவரும், இந்திய கிரிக்கெட்டின் புகழ்பெற்ற கேப்டனுமான எம்.எஸ் தோனிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தோனி, சச்சின், சேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் பெயரில் போலி விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பட்ட நிலையில், ரசிகர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதும், அவரது இடத்தை நிரப்ப தோனி தகுதி பெறவில்லை எனத் தெரிய வருகிறது. காரணம் என்னவென்றால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு நபரும், அனைத்து ஃபார்மெட்டுகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக இருக்கிறது.
தோனி 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் இன்னும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால், அவரை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய முடியாது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2021 டி 20 உலகக் கோப்பையின் போது அவர் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்திய அணி அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, எந்தவொரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்தார். இதனால், வெளிநாட்டு பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, கவுதம் கம்பீரை பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுதொடர்பாக கவுதம் கம்பீர் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.