ஏன் புனே தோற்றது? ஒரு ஆழமான அலசல்....!

தேவையற்ற நிதானம், கடைசியில் தேவையற்ற பதற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்து புனே அணியைக் கவிழ்த்துவிட்டன....

என்.விஷால்

கையில் கிடைத்த பரிசைக் கைநழுவ விட்ட வேதனையுடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியினர் இந்நேரம் வீடு திரும்பியிருப்பார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இந்தத் தொடரில் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் புனே அணி வென்றது. நான்காவதிலும் கிட்டத்தட்ட வென்றுவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வெற்றியைக் கைநழுவவிட்டது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்னும் நிலையில் மிட்செல் ஜான்சன் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் மனோஜ் திவாரி. இன்னும் 7 ரன்கள் போதும் என்னும் நிலையில், மீண்டும் பெரிய ஷாட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாதபோது திவாரி பந்தைத் தூக்கி அடித்தார். கீரன் பொல்லார்டு அந்தப் பந்தைத் தனக்குக் கிடைத்த பரிசாக எண்ணி இரு கைகளிலும் ஏந்திக்கொண்டார்.

அதற்குள் மறு முனைக்கு வந்துவிட்ட ஸ்டீவன் ஸ்மித் ஜான்சனின் அடுத்த பந்தை எதிர்கொண்டார். அந்தப் பந்தை அவர் ஸ்வீப்பர் கவர் திசையில் தூக்கி அடித்தார். அங்கே அம்பத்தி ராயுடு அதை கேட்ச்சாக்கினார். இப்போது மூன்று பந்துகளில் 7 ரன். அடுத்த பந்தை எதிர்கொண்ட வாஷிங்டன் சுந்தரால் பந்தை அடிக்க முடியவில்லை. லெக் பை வகையில் ஒரு ரன் கிடைத்தது. 2 பந்துகளில் 6 ரன். அடுத்து கிறிஸ்டியன் அடித்த பந்தில் கஷ்டமான ஒரு கேட்ச் வாய்ப்பு வந்தது. ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடிக்கத் தவறினார். 2 ரன்கள். இன்னும் ஒரு பந்தில் 4 ரன்கள் என்னும் நிலையில் கிறிஸ்டியன் டீப் ஸ்கொயர் லெக்கில் பந்தை அடித்தார். ஒரு ரன்னுக்கு மேல் வர வாய்ப்பில்லை. ஆனால், அங்கே நின்றிருந்த மாற்று ஆட்டக்காரர் சுச்சித் பந்தைச் சொதப்பினார். இரண்டு ரன்கள் ஓடினார்கள்.

சுச்சித் பந்தை எடுத்து வீசுவதற்குள் கிறிஸ்டியனும் சுந்தரும் மூன்றாவது ரன் ஓட முயன்றார்கள். பந்து கீப்பர் பார்த்திவ் படேல் கைகளைத் தஞ்சம் அடைய அவர் சட்டென்று பந்தை வைத்து ஸ்டெம்பைச் சாய்த்தார். மும்பை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

முதல் பந்திலேயே 4 ரன்கள் வந்த நிலையில் திவாரி அடுத்த பந்தைத் தூக்கி அடித்திருக்க வேண்டியதில்லை. ஆனால் திவாரி அந்தத் தவறைச் செய்தார். தன்னுடைய விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது ஸ்மித்துக்குத் தெரியும். அடுத்த பந்தை அவர் தரையோடு ஆடி 2 ரன்கள் எடுக்க முயன்றிருக்கலாம். ஆனால் அவரும் சாகசத்தில் ஈடுபட்டார். அந்த சாகச ஆர்வத்துக்குக் கொடுத்த விலைதான் கோப்பை.

கடைசி ஓவரை நன்கு கையாண்டிருந்தால் புனே வென்றிருக்கலாம். ஆனால், போட்டியைக் கடைசி ஓவர் வரை வர விட்டதே தவறு. 129 ரன்களுக்குள் மும்பையைச் சுருட்டிய புனே, முதலிலிருந்தே ஓவருக்கு 6, 7 என ரன் எடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும். முதல் சில ஓவர்களில் ஒரு நாள் போட்டியைப் போல புனே மட்டையாளர்கள் ஆடினார்கள். ஆடுகளம் அதிரடிக்குச் சாதகமாக இல்லை என்றாலும் ஒன்று, இரண்டு என அடிப்பதற்கு எந்தச் சிக்கலும் இல்லை. குறைவான இலக்குதான் என்னும் நிலையில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்று அடித்துக்கொண்டிருந்தால்கூட புனே பாதுகாப்பாக இருந்திருக்கும். மும்பையின் பந்து வீச்சு கச்சிதமாக இருந்தது. ஆனால், புனேயின் அணுகுமுறை தன்னம்பிக்கை கொண்டதாக இல்லை.

மாறாக, 79 ரன்னுக்கு 7 விக்கெட்களை இழந்து மும்பை தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் களம் இறங்கிய க்ருனால் பாண்ட்யா, தன்னம்பிக்கையோடும் கவனத்தோடும் ஆடி 129 என்னும் சற்றே கவுரவமான ஸ்கோருக்குக் கொண்டு வந்தார். புனே அணியில் யாரேனும் ஒருவர் ரன் விகிதத்தை உயர்த்தியிருந்தால் அந்த அணி எளிதாகக் அக்கரை சேர்ந்திருக்கும். முதலில் தேவையற்ற நிதானம், கடைசியில் தேவையற்ற பதற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்து புனே அணியைக் கவிழ்த்துவிட்டன. மும்பையின் தன்னம்பிக்கையும் பதறாத அணுகுமுறையும் அந்த அணியைக் காத்தன. மும்பை அணித் தலைவர் ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களைத் திறமையாகப் பயன்படுத்தினார். மும்பை மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close