ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில், இந்திய மூத்த சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் அடிலெய்டு டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பெற்று இருப்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.
காரணம்
இந்திய ஆடும் லெவன் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படுவார் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் அணியில் சேர்க்கப்பட காரணம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் பந்து வீச்சில் பல முறை தங்களது விக்கெட்டை பறித்துக்கொடுத்துள்ளனர். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சில் அதிக முறை விக்கெட்களை இழந்து உள்ளனர்
கடைசியாக 2020ல் அடிலெய்டில் நடந்த பிங்க்-பால் டெஸ்டில் அஸ்வின் விளையாடிய போது, முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஆஸ்திரேலியாவை 194 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தாலும், 43 ரன்கள் முன்னிலை பெற அஸ்வின் உதவினார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
எனவே, அவர் இப்போது விளையாடுவதற்கு அதுவும் ஒரு காரணம். அதனால், இந்த போட்டிக்கு வாஷிங்டன் சுந்தர் தேவையில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். தற்செயலாக, அஸ்வின் வலைப்பயிற்சியில் நேர்த்தியாக பந்துவீசினார். அவர் நிதிஷ் ரெட்டிக்கு அழகான டிரிஃப்டர் வீசி இருந்தார். அதன் மூலம், நிதிஷ் ரெட்டியை முன்னோக்கி இறங்கி வந்து ஆட வைத்து எட்ச் எடுத்தார்.
மேலும், அஸ்வின் இந்த மைதானத்தில் 2.64 என்ற எக்கனாமியில் மூன்று போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வலைப் பயிற்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கம்பீர் மற்றும் ரோகித் அஸ்வினுடன் கிட்டத்தட்ட 15-20 நிமிடங்கள் பேசினர். அடுத்த நாள், வியாழக்கிழமை நடந்த பயிற்சியின் போது, அஸ்வின் நன்றாக பேட்டிங் செய்தார். அடிலெய்டில் கடைசியாக அந்த முதல் இன்னிங்ஸில், அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை 1 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 7 ரன்களிலும், கேமரூன் கிரீன் 11 ரன்களுக்கும் வீழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
ரோகித் பேச்சு
டாஸ் வென்ற பின் பேட்டிங் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். பிட்ச் தற்போது காய்ந்து இருக்கிறது. போதுமான புற்கள் இருக்கிறது. அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியை கொடுக்கலாம். ஆனால் போட்டி செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
இதில் அனைவருக்கும் உதவி இருக்கலாம் என்பதால் நல்ல போட்டியாக அமையும். இரண்டு வார இடைவெளியில் பயிற்சிகளை எடுத்து நாங்கள் விளையாட தயாராக உள்ளோம். முதல் போட்டியை வெளியில் இருந்து பார்த்தது நன்றாக இருந்தது. இந்த பெரிய தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை பெறுவதில் கவனம்.
எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சியுடன் தயாராக உள்ளனர். முதல் போட்டியில் பெற்ற வேகத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம். நான், கில், அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புகிறோம். இம்முறை நான் மிடில் ஆர்டரில் விளையாடுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அந்த சவாலுக்கு தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
இரு அணிகளின் பிளெயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே. எல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா (விசி), முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.