India Vs Australia | Rinku Singh: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 208 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ரிங்கு சிங் 22 ரன்கள் எடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs AUS: Rinku Singh’s last-ball six against Australia will not count… here’s why
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டல்
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்கிற சூழல் நிலவியது. அப்போது ஆஸ்திரேலியா அணியின் சீன் அபோட் வீசிய பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் லாங் ஆனில் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். இதன்மூலம் இந்தியா த்ரில் வெற்றியை ருசிக்க, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் மூழ்கினர்.
சிக்ஸர் சேர்ப்பு இல்லை
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிங்கு சிங் கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் அணியின் ரன்னுடன் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால், சீன் அபோட் வீசிய பந்து நோ- பால் என நடுவர் அறிவித்தார். இதனால், நோ-பாலுக்கு வழங்கப்படும் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. ரிங்கு சிங் பறக்கவிட்ட சிக்ஸர் ரன்கள் அவருக்கும் அணிக்கும் சேர்க்கவில்லை.
காரணம்
ஐ.சி.சி ஆடவர் டி20 விளையாடும் நிபந்தனைகளின்படி, பிரிவு 16.5.1: “பிரிவுகள் 16.1, 16.2 அல்லது 16.3.1 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி முடிவு எட்டப்பட்டவுடன், போட்டி முடிவடைகிறது. பிரிவு 41.17.2 (பெனால்டி ரன்கள்) தவிர, அதன் பிறகு நடக்கும் எதுவும் அதன் ஒரு பகுதியாக கருதப்படாது.
நோ பால் வீசப்பட்டவுடன், இந்தியா தனது இலக்கை அடைந்துவிட்டதால், ரிங்கு சிங் எடுத்த 6 ரன்கள் சேர்க்கப்படாது என்பதே இந்த விதி. துரதிர்ஷ்டவசமாக, ரிங்குவுக்கு இந்தியா வெற்றி பெற ஒன்றுக்கு மேல் ரன் தேவைப்பட்டிருந்தால், 6 ரன்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
“பேட்டர்கள் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போதுமான ரன்களை எடுப்பதற்கு முன் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டால், அந்த பவுண்டரியால் வந்த 4 ரன்கள் அந்த அணிக்கு சேர்க்கப்படும். பேட்டால் அடிக்கப்பட்டால் ரன்கள் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும்." என்று விதிப்புத்தகம் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“