ரோஹித் ஷர்மா ஏன் நிரந்தர கேப்டனாகக் கூடாது?

பிரஷர் இல்லாமல் நீ நீயாக விளையாடு.. உனக்கு முழு சுதந்திரம் உண்டு' என்று, அன்று கோச் கேரி கிர்ஸ்டன் சொல்லவில்லை என்றால், வீரேந்திர ஷேவாக் எனும்...

நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்ற விதம் என்னவோ நமக்கு ஏமாற்றம் தான். இருப்பினும், ஒட்டுமொத்தமாக இந்த ஆசிய கோப்பைத் தொடரில், நாம் சற்றே லேசாக உணர்ந்த விஷயம் ‘கேப்டன்’ ரோஹித் ஷர்மா.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் போதெல்லாம், குறுகிய ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அணியை வெற்றிகரமாக வழி நடத்தியவர், வழி நடத்திக் கொண்டிருப்பவர், வழி நடத்துவார் என நம்பும் அளவிற்கு ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் ஏனோ இந்த ஆசிய தொடரில் கனமாக மனதில் விதையை தூவி இருப்பவர் ரோஹித் ஷர்மா.

2017 டிசம்பரில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் போது இந்திய அணிக்கு முதன் முதலாக கேப்டனாக ரோஹித் நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் முதல் ஒருநாள் போட்டியே படுதோல்வி. மிக மோசமான தோல்வி என்று கூட சொல்லலாம்.

தரம்சாலாவில் நடந்த அப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஒருக்கட்டத்தில் 29-7 என்று இருந்தது. அதன்பின், தட்டுத் தடுமாறி 112 ரன்கள் எடுத்து தோற்றது. ஆனால், அந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோஹித், தொடர்ந்து டி20 தொடரை 3-0 என வென்றார்.

அதன்பின், மார்ச் மாதம் இலங்கையில் நடந்த நிடாஹஸ் தொடரில், கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இப்போது மீண்டும் ஆசிய கோப்பைக்கு ரோஹித் தலைமையேற்று, மீண்டும் கோப்பையை இந்திய அணிக்கு வென்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்த மூன்று தொடரிலும், கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார். அதேசமயம், இந்த அனைத்து தொடர்களும் ஆசிய துணை கண்டத்தில் நடந்தவை என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இந்தியர்களுக்கு ஏற்ற பிட்ச்களில் தான் நாம் வென்று இருக்கிறோம்.

ஆனால், களத்தில் கேப்டனாக ரோஹித் நடந்து கொண்ட விதம், அவரது தொலைநோக்கு விஷயங்கள் போன்றவை ரோஹித் ஏன் இந்திய அணிக்கு நிரந்தர கேப்டனாகக் கூடாது? என்ற கேள்வியை கொஞ்சம் சப்தத்துடனேயே எழுப்புகிறது.

முதல் விஷயம், ஆசிய கோப்பைத் தொடரில், அனைத்துப் போட்டிகளிலும் சரியான நேரத்தில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கை ரோஹித் மாற்றிய விதம், அவர் ஒரு தேர்ந்த கேப்டன் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தேவைப்படும் நேரத்தில் தோனியிடம் அவர் ஆலோசனைக் கேட்டாலும், முழுவதும் தோனியை சார்ந்திராமல் தன்னிச்சையாக அவர் பல முடிவுகளை களத்தில் எடுத்த விதம் கிரிக்கெட் விமர்சகர்களின் புருவங்களை உயர்த்தியது.

என்ன நடந்தாலும் அப்படியே அதே பவுலர்களை வீசச் செய்யும் ஒருவித குரூர மனநிலை கேப்டன்ஷிப்பை உடைத்து, அவர்களை ரொட்டேட் செய்த விதம் அழகு.

மிகவும் குறிப்பாக, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அவர் பயன்படுத்திய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். பாண்ட்யாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை, மிக நேர்த்தியாக பயன்படுத்திய ரோஹித், அவரை சிறப்பாக செயல்பட வைத்து, ஜடேஜாவிற்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட, ஆசிய கோப்பை தொடர் முடிந்த பிறகு அவர் உதிர்த்த வார்த்தைகள் தான் ஹைலைட்.

“ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, நான் தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகிய வீரர்களுக்கு ‘நீங்கள் இந்த தொடர் முழுவதும் பிளேயிங் XI’ல் இருப்பீர்கள் என்ற வாக்குறுதி அளித்துவிட்டேன். அவர்களுக்கு நாம் நம்பிக்கை அளித்தால் தான் அவர்களால் பிரஷர் இல்லாமல் இயல்பாக ஆட முடியும். இப்படித் தான் நாம் வீரர்களை உருவாக்க வேண்டும். இரண்டு போட்டிகளுக்குப் பிறகு நாம் அணியில் இருந்து நீக்கப்படுவோம் என்ற மனநிலையில் வீரர்கள் ஆடினால், அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. ஒரு அணியை நிலையாக வழிநடத்த வேண்டும் என்றால், வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஒரு வீரரின் திறமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்றிரண்டு ஆட்டங்களை வைத்து நாம் எதையும் கணிக்க முடியாது” என்று கேப்டன் ரோஹித் சொன்ன வார்த்தைகள் அவ்வளவும் உண்மை.

‘பிரஷர் இல்லாமல் நீ நீயாக விளையாடு.. உனக்கு முழு சுதந்திரம் உண்டு’ என்று, அன்று கோச் கேரி கிர்ஸ்டன் சொல்லவில்லை என்றால், வீரேந்திர ஷேவாக் எனும் அதிரடி சூரனால் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது.

இன்று அதே பாணியைத் தான் கேப்டன் ரோஹித்தும் அணியில் உட்புகுத்த எண்ணுகிறார்.

விராட் கோலி, நவநாகரீக கிரிக்கெட்டின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால், ‘கேப்டன்’ விராட் கோலியிடம் உள்ள பிரச்சனையே, வீரர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது தான்.  அது அவரது முடிவாக இருக்கலாம். ஆனால், இன்று இந்தியாவின் மிடில் ஆர்டர் வலிமையாக இருக்கிறதா? எந்த மிடில் ஆர்டரை வைத்துக் கொண்டு 2019 உலகக் கோப்பையில் இந்தியா விளையாட முடியும்? இதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா?

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத விராட் கோலியை விட, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் சிறந்த கேப்டன் என்பது நமது வாதம் இல்லை. ஆனால், கேப்டனாக கோலியை விட ரோஹித்தின் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது என்பதே நமது கருத்து.

எல்லாவற்றிற்கும் தோனியிடம் ஆலோசனை கேட்பது சிறந்த கேப்டன்ஷிப்பாக இருக்க முடியாது!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close